விளம்பரப் பதாகைகளுக்காக ஆணி அடித்து மரங்களை சிதைக்கும் அவலம்!

சாலையோரங்களில் உள்ள மரங்களைப் பாழ்படுத்தும் வகையில், ஆணி அடித்து மாட்டப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளம்பரப் பதாகைகளுக்காக ஆணி அடித்து மரங்களை சிதைக்கும் அவலம்!

சாலையோரங்களில் உள்ள மரங்களைப் பாழ்படுத்தும் வகையில், ஆணி அடித்து மாட்டப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 சாலையோர மரங்களில் விளம்பரங்கள் அமைத்தல் வனச்சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் பல இடங்களில் இது மீறப்படுவதால், மரங்களில் அறிவிப்புகள், விளம்பரங்கள் அடங்கிய அட்டைகள் தொங்குகின்றன. சாலையில் செல்வோரை ஈர்க்கவும், எவ்வித செலவும் இன்றி தங்கள் பொருள்களை, நிறுவனங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கவும், பெரும்பாலான வணிகர்கள் இந்த யுக்தியைக் கையாள்கின்றனர். எனவே, நிழல் தரும் மரங்கள், விளம்பரத் தாங்கிகளாக உருமாறி வருகின்றன.

 தமிழகத்தின் பெரும்பாலான நெடுஞ்சாலைகளின ஓரங்களில் இதுபோன்ற விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. உதாரணமாக திருவாரூரிலிருந்து தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே ஆணி அடித்து விளம்பரப் பதாகைகள் மாட்டப்பட்டுள்ளன. கயிற்றால் கட்டினால் காற்றில் விழக்கூடும் என்று ஆணி அடித்து, விளம்பரப் பதாகை நகராதபடி, அழுத்தமாக பொருத்தப்பட்டுள்ளன.

 திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலையில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த சாலையின் ஒருபுறம் ஓடம்போக்கி ஆறும், மறுபுறம் பள்ளமாகவும் காணப்படுகிறது. சாலை ஓரங்களில் பனை மரங்கள் வரிசையாக இருப்பதால், மண் சரிவு ஏற்படாமல் சாலையைப் பாதுகாக்கின்றன.

 ஆனால் இந்த விளம்பரப் பதாகைக்காக ஆணி அடிப்பதன் மூலம், பனை மரம் பாதிப்படைந்து, பின்னாளில் பெரிய அளவு விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தவிர நாகை, கும்பகோணம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் சாலையில் அங்கிங்கெனாதபடி, எங்கும் இந்த விளம்பரப் பதாகைகள், மரங்களை ஆக்கிரமித்துள்ளன.

 மரங்களின் தன்மைகள் குறித்தும், மரங்களில் ஆணி அடிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி தாவரவியல் பேராசிரியர் எஸ். தர்மராஜன் கூறியது:

 மரங்கள் என்பவை ஆக்ஸிஜனை உற்பத்திச் செய்யக்கூடிய தொழிற்சாலை ஆகும். இந்த மரங்கள் கார்பன்டை- ஆக்சைடு எனப்படும் கரியமில வாயுவை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. உலகம் முழுவதும் காணப்படும் ஆக்ஸிஜன்களுக்கு காரணமே மரங்கள்தான்.

 ஒருவேளை மரங்கள் இல்லாமல் போனால், உலகம் முழுவதும் கார்பன்டை- ஆக்சைடுகளால் சூழப்பட்டிருக்கும். அப்போது ஆக்ஸிஜன்களை செயற்கையாகத் தொழிற்சாலைகளில் தயாரிக்க வேண்டியிருக்கும்.மரங்களும் மனிதர்களைப் போன்ற தோல் அமைப்பை உடையவை. வேரிலிருந்து நீரை சைலத்தின் மூலமாக மற்ற பாகங்களுக்குக் கடத்துகின்றன. இது நீரேற்றம் எனப்படுகிறது.

 அதேபோல், புளோயத்தின் மூலமாக மேல்புறத்தில் தயாரிக்கப்பட்ட உணவை வேர் உள்ளிட்ட இதர பாகங்களுக்கு கடத்துகின்றன. இது சாரேற்றம் என அழைக்கப்படுகிறது.

 மரத்தின் பட்டையை சேதப்படுத்தினாலோ அல்லது ஒரு பாகத்தை வெட்டினாலோ அது தானாகவே பாதிப்பை சரிசெய்து கொள்ளும். உதாரணமாக, மனிதர்களது உடலில் காயம் ஏற்பட்டால் எவ்வாறு சில நாள்களில் சரியாகிறதோ அதே முறையில் மரங்களது உடலில் ஏற்படும் காயங்கள் ஏறக்குறைய சரியாகிவிடும். அதேநேரம் மரத்தில் ஆணி அடிக்கும் போது, அந்த ஆணி மரத்திலேயே நிலைநிறுத்தப்படுவதால் பாதிப்பை சரிசெய்வது மிகவும் சிரமம். சில நாள்களில் அந்த ஆணியானது, துருப்பிடித்து, சைலம்-புளோயத்தின் வேலைகளைச் சேதப்படுத்துகிறது.

 இதனால் மரத்தின் இதர பாகங்களுக்கு செல்லும் நீர், உணவு ஆகியவை தடைபடுகிறது. நீர், உணவில்லாமல் தவிக்கும் மரங்கள் மெல்ல தங்கள் வாழ்நாளை இழந்து, உயிர்விடுகின்றன. மரங்கள் இல்லாமல் போனால் மழை குறையும், மனிதனுக்கு வேண்டிய ஆக்ஸிஜனும் குறையும். இதனால், மனிதனது வாழ்நாளும் குறையக்கூடிய சூழல் உருவாகும். எனவே மரங்களில் ஆணி அடிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 மேலும், அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற நெறியாளர் தமிழ்க்காவலன் கூறியது:

 நெடுஞ்சாலைத்துறையினரும் ஒளிரும் வில்லைகளை தனியாக அதற்கென கம்பங்களை பயன்படுத்தாமல், மரங்களிலேயே ஆணி அடித்து ஒட்டுகின்றனர். இதனால் மரங்கள் அழிவைச் சந்திப்பதோடு, மழைவளம் குறைந்து, விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கும் சூழல் உருவாகிறது என்றார்.

 தற்போதைய சூழலில் மர வளர்ப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. நெடுஞ்சாலைப் பணிகளுக்காக சாலையோர மரங்கள் வெட்டப்படுகின்றன. ஆறுகளைத் தூர்வாரும் பணிகளால் ஆற்றங்கரையோர மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றன. ஆயினும், இதை ஈடு செய்ய மரங்கள் நடப்படுவதில்லை. இயற்கையின் அருட்கொடையான மரங்களைச் சேதப்படுத்தும் செயல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com