காவிரி உரிமையை தமிழகத்துக்கு நிச்சயம் பெற்றுத் தருவோம்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

தமிழகத்திற்கான காவிரி நீர் உரிமையை நிச்சயம் பெற்றுத் தருவோம் என தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
காவிரி உரிமையை தமிழகத்துக்கு நிச்சயம் பெற்றுத் தருவோம்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

தமிழகத்திற்கான காவிரி நீர் உரிமையை நிச்சயம் பெற்றுத் தருவோம் என தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, அதிமுக சார்பில் நாகை அவுரித் திடலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது :
 தமிழகத்தில் காவிரி பிரச்னையைப் பற்றி பேசுவதற்கு தார்மிக உரிமை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான். காவிரி நீர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை என அனைத்துப் பிரச்னைகளிலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைத்த கட்சிகள் திமுகவும், காங்கிரஸ் கட்சியும்தான்.
 தமிழக முதல்வராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர்தான் தொடர் வலியுறுத்தல்கள், சட்டப் போராட்டங்கள் மூலம் தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை உறுதி செய்தனர்.
 1991-இல் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க இடைக்காலத் தீர்ப்பு வெளியிட்டது. இந்தத் தீர்ப்பை செல்லாது என அறிவிக்கக் கோரி கர்நாடகம் உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடனடியாக, உச்சநீதிமன்றத்தை அணுகி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு செல்லத்தக்கதுதான் என்ற தீர்ப்பைப் பெற்றார்.
 காவிரி நடுவர் மன்றம் மேற்கொண்ட பல கட்ட விசாரணைகளுக்குப் பின்னர், 2007-இல் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த திமுக நினைத்திருந்தால் அடுத்த நாளே இறுதித் தீர்ப்புக்கு செயல்வடிவம் கிடைக்கச் செய்திருக்கலாம். ஆனால், அதை செய்யாமல் கருணாநிதி தமிழகத்துக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்தார்.
 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை பலமுறை நேரில் சந்தித்து ஜெயலலிதா வலியுறுத்தினார். உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி 2013-இல் காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தார் ஜெயலலிதா.
 காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு அடுக்கடுக்கான பல துரோகங்களை இழைத்த திமுகவினர் தற்போது நடைபயணம், சைக்கிள் பயணம், மனிதச் சங்கிலி போராட்டம் என கபட நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். இதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
 ஜெயலலிதா வகுத்த பாதையில் தடம் புரளாமல் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு, அவரது வழியில் காவிரி உரிமையை தமிழகத்துக்கு நிச்சயம் பெற்றுத் தரும்.
 காவிரி மேலாண்மை வாரியம் (ஸ்கீம்) அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மே 3-ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ஸ்கீம் அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு 3-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த நாளைத்தான் நாங்கள் ஆவலுடன் எதிர்கொண்டுள்ளோம்.
 காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை உறுதி செய்ய அதிமுக தொடர்ந்து மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவதுடன், போராட்டங்களையும் தொடரும். தமிழகத்தின் காவிரி ஜீவாதார உரிமையைப் பெற எந்த நடவடிக்கையை, எந்த விதத்தில் கையாண்டால் வெற்றி கிடைக்குமோ அந்த நடவடிக்கையை நிச்சயம் மேற்கொள்வோம் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
 கூட்டத்துக்கு அதிமுக விவசாயப் பிரிவு மாவட்டச் செயலாளர் எம். பூராசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஓ.எஸ். மணியன், மக்களவை உறுப்பினர்கள் கே. கோபால், ஆர்.கே. பாரதிமோகன், முன்னாள் அமைச்சர்கள் ஆர். ஜீவானந்தம், கே.ஏ. ஜெயபால், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், பி.வி. பாரதி, வீ. ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com