சென்னை விமான நிலைய விரிவாக்கத்தால்.. பிள்ளைகளுக்கு பெண் கிடைக்கவில்லை: மக்களின் கவலைக் குரல்

சென்னை விமான நிலையம் விரிவாக்கப்படும் என்ற செய்தி மற்றவர்களுக்கு வேண்டும் என்றால் ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால், விமான நிலையத்தை சுற்றி வாழும் மக்களுக்கு?
சென்னை விமான நிலைய விரிவாக்கத்தால்.. பிள்ளைகளுக்கு பெண் கிடைக்கவில்லை: மக்களின் கவலைக் குரல்


சென்னை: சென்னை விமான நிலையம் விரிவாக்கப்படும் என்ற செய்தி மற்றவர்களுக்கு வேண்டும் என்றால் ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால், விமான நிலையத்தை சுற்றி வாழும் மக்களுக்கு?

சென்னை விமான நிலையத்தை சுற்றியிருக்கும் பொழிச்சலூர், கௌல் பஜார் பகுதியில் வாழும் மக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் செய்தியாகவே இது இருக்கிறது.

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சுமார் 150 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட உள்ளது. இதனால், தங்களது வாழ்விடம் பறிபோகுமோ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

இது குறித்து விமான நிலைய இயக்குநர் ஜி. சந்திரமௌலி பங்கேற்ற பொதுமக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  இதில் ஏராளமான மக்கள் தங்கள் வாழ்விடங்கள் விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக அரசால் கையகப்படுத்தப்படுமா என்ற கேள்வியோடு வந்திருந்தனர்.

அது குறித்துப் பேசிய இயக்குநர், முதலில் சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 200 ஏக்கர் நிலம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. பிறகு இது 150 ஏக்கர் நிலமாக சுருக்கப்பட்டது. இதில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான பயிற்சி மையத்துக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலமும் அடங்கும். எனவே, மீதமிருக்கும் 110 ஏக்கர் நிலத்தைத்தான் மாநில அரசு பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தித் தர உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கௌல் பஜாரைச் சேர்ந்த கதிரவன், இந்த பகுதியில் வாழும் மக்கள் எப்போதுமே மன உளைச்சலோடுதான் இருக்கிறார்கள். அரசு எப்போது வேண்டுமானாலும் கையகப்படுத்தும் நிலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால், எங்கள் பகுதியில் வாழும் பிள்ளைகளுக்கு பெண் கொடுக்க யாரும் முன்வருவதில்லை என்று வருத்தத்தோடு கூறினார்.

இதற்கு பதில் அளித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, நிச்சயமாக விமான விரிவாக்கப் பணிக்காக உங்கள் நிலம் கையகப்படுத்தப்படாது. ஏன் என்றால், பல்வேறு சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதால் கௌல் பஜார் பகுதியை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர் என்று தெரிவித்தார்.

மேலும், பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர்களின் கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக பொழிச்சலூரில் எந்த நிலமும் கையகப்படுத்தப்படாது. தற்போதைக்கு மனப்பாக்கம் பகுதியில் 50 ஏக்கர் நிலமும், கோலப்பாக்கத்தில் 30 ஏக்கர் நிலமும், கௌல்பஜார் பகுதியில் 2.98 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com