தமிழகத்துக்குள் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கக் கோரி வழக்கு

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு மையங்களைத் தமிழகத்துக்குள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு மையங்களைத் தமிழகத்துக்குள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கலியமுத்து மைலவன் தாக்கல் செய்த மனுவில், மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2018-2019-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. இந்தத் தேர்வுக்காக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 தமிழக மாணவர்களுக்கு கேரளத்தில் தேர்வு மையங்கள்: இந்த நிலையில் தேர்வு எழுத உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் திருச்சி மாணவர்களுக்கு கேரள மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விதிகளின்படி நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள மையங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தற்போது அண்டை மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது.
 இது குறித்து சிபிஎஸ்இ கடந்த ஏப்.18-ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வு மைய ஒதுக்கீட்டில் மனித குறுக்கீடுகள் எதுவும் இல்லை. இந்த ஒதுக்கீடுகள் அனைத்தும் கணினி மூலம் ஒதுக்கப்பட்டவை. எனவே, ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை மாற்றி அமைக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
 சிபிஎஸ்இ-யின் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்துக்குள் இருக்கும் தேர்வு மையங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு வியாழக்கிழமை (ஏப்.26) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com