திருச்சியில் தடம் புரண்டது பல்லவன் ரயில்

காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு புதன்கிழமை சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதனால் 9 ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
திருச்சியில் தடம் புரண்டது பல்லவன் ரயில்

காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு புதன்கிழமை சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதனால் 9 ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் (எண்: 12623) புதன்கிழமை அதிகாலை 6.25-க்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. 27 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் இருந்தனர். ரயில் நிலையத்துக்கு 200 மீட்டர் தொலைவில் கிராப்பட்டியில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் ரயில் என்ஜின் திடீரென தடம் புரண்டது. 
சரளைக் கற்களில் ரயில் சக்கரங்கள் செல்லும் சப்தம் கேட்டு லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். என்ஜினின் 6 சக்கரங்களும் தண்டவாளத்தைவிட்டு விலகி தரையில் இறங்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை.
தகவலறிந்து பொன்மலை ரயில்வே பணிமனையிலிருந்து ரயில்வே மீட்பு வாகனமான தனி ரயில் உடனடியாக கிராப்பட்டிக்கு வந்தது. இந்த ரயிலில் வந்த 50 பேர் கொண்ட குழுவினர் ஹைட்ராலிக் ஜாக்கிகளை பயன்படுத்தி தடம்புரண்ட சக்கரங்களை தண்டவாளத்தில் நிறுத்தினர். பின்னர், தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டு தற்காலிகமாக இணைப்புத் தண்டவாளங்களை பொருத்தி என்ஜினை மட்டும் தனியாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது வெற்றிகரமாக நடந்ததால், உடனடியாக அதே என்ஜினை ரயில் பெட்டிகளுடன் மீண்டும் இணைத்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு அனுப்பினர். மாற்று என்ஜின் திருப்பி அனுப்பப்பட்டது.
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்துக்குப் பிறகு 9.40 மணிக்கு புறப்பட்டுச் சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணியை முடித்துக் கொண்டு 10.05-க்கு புறப்பட்டுச் சென்றது. 
ரயிலில் இருந்த பயணிகள் கூறுகையில், ரயில் தடம் புரண்டதை உணர்ந்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டார். வேகமாக வந்திருந்தாலோ, ரயிலை உடனடியாக நிறுத்தாவிட்டாலே அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். மேலும், மீட்புப் பணியாளர்களும் கடுமையாக உழைத்து சரிசெய்தது பாராட்டுக்குரியது என்றனர்.
திரண்ட கூட்டம்: ரயில் தடம் புரண்டதை அறிந்து மக்கள் திரண்டதால் மீட்புப் பணியில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸார், ரயில்வே போலீஸார், மாநகரக் காவல் போலீஸார் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். இருப்பினும் ரயில் மீண்டும் புறப்படும் வரை தண்டவாளத்தின் இருபுறமும் மக்கள் கூட்டமாக திரண்டிருந்து வேடிக்கை பார்த்தனர்.
9 ரயில்கள் தாமதம்
ரயில் தடம் புரண்டதால் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு "புதன்கிழமை காலை வந்த ரயில்கள் அனைத்தும் திருச்சியிலிருந்து தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன. 
திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 2.35 மணி நேரம், திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் 25 நிமிடம், மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் 95 நிமிடம், திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் 3 மணிநேரம் 15 நிமிடம் தாமதமாகச் சென்றன. திண்டுக்கல் - திருச்சி பயணிகள் ரயில் 120 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தது. திருச்சி-மானாமதுரை பயணிகள் ரயில் 55 நிமிடம் தாமதமாகச் சென்றது. காரைக்குடி- திருச்சி பயணிகள் ரயில் 1 மணிநேரம் 35 நிமிடம் தாமதமாகச் சென்றது. கடலூர்-திருச்சி பயணிகள் ரயில் 35 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தது. பல்லவன் எக்ஸ்பிரஸ் 3 மணிநேரம் 20 நிமிடம் தாமதமாகச் சென்றது.
விரிசல் குறித்து விசாரணை
தண்டவாள விரிசல் எப்படி உருவானது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. வழக்கமாக கோடைக் காலத்தில் அதிக வெப்பத்தால் தண்டவாளங்களில் விரிசல் ஏற்படும். அதுபோல நிகழ்ந்திருக்கலாம். இல்லையெனில் யாரேனும் சதி செய்தனரா எனவும் விசாரிக்கின்றனர். ரயில் நிலையத்துக்கு மிக அருகில் உள்ள பகுதியில் தினந்தோறும் தண்டவாள பராமரிப்புப் பணியாளர்கள் உள்ள நிலையில் விரிசலைக் கவனிக்காமல் இருந்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com