தொழில் தொடங்க இயலாத மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தொழில் தொடங்க முடியாமல் இருக்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு உதவும் வகையில் புதிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று
தொழில் தொடங்க இயலாத மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தொழில் தொடங்க முடியாமல் இருக்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு உதவும் வகையில் புதிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
 தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் "கோடைக் கொண்டாட்டம்' விற்பனைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
 இதில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் 55 அரங்குகளில் இடம்பெற்றுள்ளன. பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருள்கள், சணல், காகிதம், பனை ஓலை, வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், தோல் பொருள்கள், வாசனைப் பொருள்கள், கிராமிய உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
 கண்காட்சியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
 அதைத்தொடர்ந்து, சுயஉதவிக் குழுக்கள் "சானிட்டரி நாப்கின்' தயாரித்து வழங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி, ரூ.7.56 கோடி மதிப்பில் 36 லட்சம் நாப்கின்களை தயாரித்து வழங்குவதற்கான ஆணை 52 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியது: தமிழகத்தில் 6.51 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இவற்றில் 95 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
 தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் 2017 -18 ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.8.49 கோடி மதிப்பிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 ரூ.99 லட்சம் மதிப்பிலான சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பணிகள், ரூ.2.76 கோடியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது ரூ.7.56 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
 குறிப்பாக தொழில் தொடங்க இயலாத மகளிர் சுயஉதவிக் குழுக்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு உதவி செய்யும் வகையிலான புதிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார் அமைச்சர்.
 "கமலின் கருத்து தவறு'
 மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாதிரி கிராம சபைக் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "ஆண்டுக்கு நான்குமுறை கூட வேண்டிய கிராம சபைக் கூட்டங்கள் தமிழகத்தில் கூடுவதில்லை. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது' என்றார்.
 இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
 தமிழகத்தில் கிராம சபை முறையாகக் கூடுவதில்லை என்று கமல் கூறிய கருத்து தவறு. அவர் தெரியாமல் பேசுகிறார். ஆண்டுக்கு நான்கு முறை கிராம சபைகள் கூடுகின்றன. தற்போது பஞ்சாயத்து தலைவர்கள் இல்லாததால், கூட்டம் நடைபெறாதது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஆனால், இதற்கென்று சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 இந்தக் கூட்டங்களில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில்தான் தமிழகத்தில் விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம் உள்ளிட்டத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com