பழம் பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

பழம்பெரும் பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி (85) புதன்கிழமை காலமானார்.
பழம் பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

பழம்பெரும் பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி (85) புதன்கிழமை காலமானார்.
 1941-ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் பி.ஆர்.பந்துலுவால் "விஜயலட்சுமி' திரைப்படம் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானார். 1945-ஆம் ஆண்டு "ராமராஜ்யம்' படத்தில் "ஊஞ்சல் ஊஞ்சல்' பாடலை பாடி காந்தியின் பாராட்டைப் பெற்றவர்.
 கமல்ஹாசன் அறிமுகமான "களத்தூர் கண்ணம்மா' படத்தில் "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' , "பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா', "படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு' உள்ளிட்ட ஏராளமான புகழ்பெற்ற பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரர்.
 1955-இல் வெளியான "டவுன் பஸ்' திரைப்படத்தில் கவிஞர் கா.மு.ஷெரீப் எழுதி கே.வி.மகாதேவன் இசையமைத்த 'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' பாடல், அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி' படத்தில் கே.பி.காமாட்சி சுந்தரம் எழுதிய ஒரு பாடலை மாதுரி தேவிக்காக பாடிய "இதய வீணையின் நரம்பை மீட்டியே இன்பம் சேர்த்திடும் காதல்' ஆகிய பாடல் மிகப் பிரபலம்.
 தமிழக அரசின் கலைமாமணி, கவிஞர் கண்ணதாசன் வழங்கிய "மழலைக் குரலரசி' பட்டமும், ம.பொ.சி.யால் "பாரதி தேனிசைத் தென்றல்' உள்ளிட்ட பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்ற இவர் ஆயிரம் திரை இசைப் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
 "குழந்தையும் தெய்வமும்' படத்தில், "கோழி ஒரு கூட்டிலே' என்ற என்றும் இனிக்கும் பாடலையும் இவர் பாடியுள்ளார். "மகாதேவி' படத்தில் "காக்கா காக்கா மை கொண்டா' பாடலும், "மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே' போன்ற பாடல்களும் இவரது தனித்துவத்துக்கு சான்று.
 "கைதி கண்ணாயிரம்' படத்தில் "சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்' என்ற பாடல், "பராசக்தி' படத்தில், "ஓ, ரசிக்கும் சீமானே', "புதுப் பெண்ணின் மனசைத் தொட்டுப் போரவரே' ஆகிய பாடல்கள் மூலம், இவர் ஜனரஞ்சகமாகப் பாட வல்லவர் என்பது நிரூபணமானது.
 பூர்வீகம் மதுரை: மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பாடகி ராஜேஸ்வரி பல ஆண்டுகளாக சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தார். அவருக்கு கற்பகவல்லி, ஆர்த்தி என்கிற இரண்டு மகள்கள்; அவர்களில் ஆர்த்தி 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ராஜ் வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளார்.
 இன்று இறுதிச் சடங்கு: எம்.எஸ்.ராஜேஸ்வரியின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (ஏப்.26) மாலை 4 மணிக்கு மேல் குரோம்பேட்டையில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com