மாணவிகளிடம் பாலியல் பேர விவகாரம்: 5 நாள் விசாரணை முடிந்து நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையிலடைப்பு

பாலியல் பேர வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி, ஐந்து நாள் சிபிசிஐடி போலீஸ் காவலுக்குப் பின்னர் சாத்தூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்
மாணவிகளிடம் பாலியல் பேர விவகாரம்: 5 நாள் விசாரணை முடிந்து நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையிலடைப்பு

பாலியல் பேர வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி, ஐந்து நாள் சிபிசிஐடி போலீஸ் காவலுக்குப் பின்னர் சாத்தூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.
 அவரை ஏப்ரல் 20-ஆம் தேதி போலீஸ் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீஸார், 5 நாள் விசாரணைக்குப் பின்னர் புதன்கிழமை சாத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 அப்போது நிர்மலாதேவியை மே 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு குற்றவியல் நடுவர் கீதா உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 முருகனுக்கு 5 நாள் போலீஸ் காவல்: இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீஸார் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 இதனையடுத்து முருகனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த குற்றவியல் நடுவர் கீதா, உதவிப் பேராசிரியர் முருகனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் முருகனை, போலீஸார் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
 நிர்மலா தேவிக்கு எதிர்ப்பு: முன்னதாக சாத்தூர் நீதிமன்றத்துக்கு நிர்மலாதேவி மற்றும் முருகன் அழைத்து வருவதையடுத்து காவல் துணைகண்காணிப்பாளர் நாராயணன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 நிர்மலாதேவி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டவுடன், அங்கு கூடியிருந்த மாதர் சங்கத்தினர் அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மாதர் சங்கத்தினரை நீதிமன்றத்திற்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com