வீட்டு வசதி வாரிய வீடுகள்: பணி ஓய்வுக்குப் பிறகு வசிக்க உரிமை கிடையாது; நீதிமன்றம் உத்தரவு

வீட்டு வசதி வாரியத்தில் வாடகைக்கு வீடு பெற்றவர்கள் பணி ஓய்வுக்குப் பிறகு அதே வீட்டில் தொடர்ந்து வசிக்க உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டு வசதி வாரியத்தில் வாடகைக்கு வீடு பெற்றவர்கள் பணி ஓய்வுக்குப் பிறகு அதே வீட்டில் தொடர்ந்து வசிக்க உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 அரசு ஊழியருக்கான ஒதுக்கீட்டில் கடந்த 1996-ஆம் ஆண்டு சென்னை நந்தனம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ரத்தினம் வாடகைக்கு குடியேறினார். இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனையடுத்து வீட்டை காலி செய்யும்படி கடந்த 2007-ஆம் ஆண்டு வீட்டு வசதித் துறை ரத்தினத்தின் மகள் மணிமேகலைக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த உத்தரவை எதிர்த்து மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
 இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள அரசு உயர் அதிகாரிகளுக்கான குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெறும் அதிகாரிகள் பணி ஓய்வுக்குப் பின்னரும் வீட்டை காலி செய்வதில்லை. ஆனால், அரசு ஊழியராக இருந்து இறந்துவிட்ட மனுதாரரின் குடும்பத்தினரை அதிகாரிகள் வேண்டுமென்றே தொந்தரவு செய்து வருவதாக வாதிட்டார்.
 அப்போது வீட்டுவசதி வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், அரசு ஊழியர் என்ற அடிப்படையில் குடியிருப்பு ஒதுக்கீடு பெறுபவர்கள் பணி ஓய்வுக்குப்பின் காலி செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
 இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அரசு ஊழியர்களுக்காகத்தான் வீட்டுவசதி வாரிய வீடுகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன. பணி ஓய்வுக்குப் பிறகு அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் முறைப்படி வீட்டை காலி செய்து கொடுக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. பணி ஓய்வுக்குப் பிறகும், அதே வீட்டில் தொடர்ந்து வசிக்க உரிமை கோர முடியாது. இந்த மனநிலை மாற வேண்டும்.
 எனவே, மனுதாரர் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்து வீட்டுவசதி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஓருவேளை காலி செய்ய தவறும் பட்சத்தில் வீட்டைக் காலி செய்ய வீட்டு வசதி வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறி உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com