காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா வழியில் நல்ல தீர்வை பெறுவோம்: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

காவிரி விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நின்று நல்ல தீர்வை பெறுவோம் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா வழியில் நல்ல தீர்வை பெறுவோம்: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

காவிரி விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நின்று நல்ல தீர்வை பெறுவோம் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
 திருச்சி சுப்பிரமணியபுரம் ஹைவேஸ் காலனியில் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தை வியாழக்கிழமை மாலை திறந்து வைத்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், அவர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசியது: ஜெயலலிதாவின் கோட்டையாக திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் அன்றும், இன்றும் திகழ்ந்து வருகிறது. சோதனைகள் நடந்தபோதெல்லாம் அதனை சாதனைகளாக்கி ஜெயலலிதாவின் கோட்டை என ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபித்துக் காட்டிய மாவட்டம் திருச்சி மாவட்டம்.
 எத்தனையோபேர் கட்சியை உடைக்க கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் எண்ணங்களைத் தவிடுபொடியாக்கிவிடும் வகையில், பொதுமக்கள் அளித்த எழுச்சிமிகு வரவேற்பு உணர்த்துகிறது. இனி, எத்தனை தேர்தல் வந்தாலும் அத்தனை தேர்தல்களிலும் அதிமுகதான் வெற்றி பெறும்.
 ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற சிலர் நினைத்தார்கள். ஆனால், அவர்களின் திட்டங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி ஆட்சியை நடத்தி வருகிறோம். எதிர்க்கட்சிகள், அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தினமும் ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்துகின்றனர்.
 ஆனால், பொதுமக்கள், கட்சியினர் நமக்குப் பக்கபலமாக இருக்கின்றனர். எத்தனை போராட்டங்களை நடத்தினாலும் அத்தனையையும் சமாளித்து சாதிக்கக்கூடிய இயக்கமாக அதிமுக திகழ்ந்து வருகிறது.
 காவிரிப் பிரச்னையாக இருந்தாலும், முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்னை என எந்த பிரச்னையாக இருந்தாலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நின்று வெற்றி பெறுவோம். காவிரிப் பிரச்னை குறித்து பலரும் தற்போது குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், காவிரிப் பிரச்னைக்காக உண்மையாக குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் அதிமுக மட்டும்தான்.
 மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். 1986 இல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என குரல் கொடுத்தார். அதுபோல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் காவிரிப் பிரச்னைக்காக சட்டபூர்வத் தீர்வு பெற வேண்டும் என போராடினார். அவர் வழியில் நின்று காவிரிப் பிரச்னையில் நல்ல தீர்வை பெறுவோம் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
 நிகழ்வில், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, சி.வி. சண்முகம், வெல்லமண்டி என்.நடராஜன், சி. வளர்மதி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், மக்களவை உறுப்பினருமான ப.குமார், திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ரத்தினவேல், மக்களவை உறுப்பினர் மருதராஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திரசேகரன், செல்வராசு, பரமேசுவரி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com