குட்கா ஊழல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை
குட்கா ஊழல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணை கோரி: குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனைக்கு தமிழகத்தில் தடைவிதிக்கக் கோரி, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தெரிவித்திருந்ததாவது:
உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை தடை செய்து கடந்த 2011 - ஆம் ஆண்டு உத்தரவிட்டன. தமிழகத்திலும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு தடைவிதித்து கடந்த 2013 -ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதுதொடர்பான அறிவிப்பாணை 2015 - இல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதியில் உள்ள பான்மசாலா நிறுவனத்துக்குச் சொந்தமான குடோனில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில், அந்த நிறுவனம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது தெரிய வந்தது. மேலும் அங்கு கைப்பற்றப்பட்ட டைரி மூலம், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை டிஜிபி ராஜேந்திரன், காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. 
தீர்ப்பு: இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி மாதம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
அதன் விவரம்: சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் குட்கா விற்பனையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தடை செய்யப்பட்ட குட்காவை உற்பத்தி செய்வது, ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வது அல்லது விற்பனை செய்வது உள்ளிட்ட எந்தச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அதற்கு உடந்தையாக இருந்தாலும் குற்றமே.
நீதித் துறையின் மீது: இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளதால், வழக்கு விசாரணயின் மீது பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடும். நீதித் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை ஒருபோதும் வீணாகக் கூடாது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். இந்த வழக்கில் பொது ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாலும், வழக்கை வெளிப்படைத் தன்மையுடன் விசாரிக்க வேண்டி உள்ளதாலும், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உகந்தது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, இவ்வழக்கை சிபிஐ அதிகாரிகள் முழுமையான கோணத்தில் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 
முதல்வருடன் டிஜிபி ஆலோசனை
குட்கா ஊழல் வழக்கினை சிபிஐ விசாரிக்கும் என உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை, தமிழக டிஜிபி தே.க.ராஜேந்திரன் சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலகத்தில் சுமார் 15 நிமிஷங்கள் வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, குட்கா வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து முதல்வரிடம் அவர் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
முன்னதாக, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டியுடனும் டிஜிபி ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
வழக்கு கடந்து வந்த பாதை
குட்கா ஊழல் விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், காவல் துறை உயரதிகாரிகள் இருவர் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டு முதல் சிபிஐ விசாரணை வரை, இந்த வழக்கு கடந்து வந்த பாதை:-
•  2013: தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
•  2016: குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பது தொடர்பாக வருமான வரித் துறையினர் தொடர் சோதனை. 
•  ஜூன் 8: பிரபல குட்கா நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் சில குடோன்களில் வருமான வரித் துறை அதிரடி சோதனை. பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல். ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித் துறை தலைவர் (புலனாய்வுப் பிரிவு) பி.ஆர்.பாலகிருஷ்ணன், தமிழக அரசுக்குக் கடிதம்.
•  2017 ஏப்ரல் 8: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரி சோதனை. 
•  ஜூலை 1: டிஜிபி தே.க.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு.
•  ஜூலை 5: அவரது பணி நீட்டிப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு.
•  ஜூலை 9: சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோருக்குச் சொந்தமான குடோன்களில் சோதனை. அங்கு கைப்பற்றப்பட்ட டைரி முக்கிய துருப்புச்சீட்டானது.
•  ஜூலை 28: குட்கா ஊழல் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு.
•  ஆகஸ்ட் 3: நீதிமன்ற தீர்ப்பின்படி ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.ஜெயக்கொடி நியமனம்.
•  2018 ஜனவரி 18: வி.கே.ஜெயக்கொடி திடீர் மாற்றம்.
•  ஏப்ரல் 26: குட்கா ஊழல் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
சோதனையால் வந்த சோதனை
கடந்த ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி, வருமான வரித் துறையினரால் செங்குன்றத்தில் உள்ள மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் பங்குதாரராக உள்ள குட்கா குடோனில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு, இந்த குட்கா ஊழலில் லஞ்சம் வாங்கிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் சிக்கியன. இதையடுத்து இந்த ஊழலில் தொடர்புடைய முக்கிய நபர்களின் பட்டியலைத் தயாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 2016 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 -ஆம் தேதி அப்போதைய தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை டிஜிபிக்கு வருமான வரித் துறை தனித்தனியாக கடிதம் அனுப்பியது. 
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடந்த 2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் 5 -ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.56 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையின்போது மாதவராவ் தெரிவித்துள்ளார். இதனை "ஹெச்.எம்.' என மாதவராவ் தனது ஆவணங்களில் குறிப்பிட்டு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலா அறையில் வருமானவரித் துறை சோதனையிட்டது. அப்போது குட்கா ஊழல் குறித்து அப்போதைய காவல் துறை டிஜிபி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய ரகசியக் கடிதம் கைப்பற்றப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com