தமிழக சிறைச்சாலைகளுக்கு ரூ.2.19 கோடியில் அவசரகால ஊர்திகள்

தமிழகத்திலுள்ள மத்திய சிறைகள், மகளிர் மற்றும் 10 மாவட்டச் சிறைகளுக்கு ரூ.2.19 கோடியில் அவசரகால ஊர்திகள் விரைவில் வாங்கப்படும்
தமிழக சிறைச்சாலைகளுக்கு ரூ.2.19 கோடியில் அவசரகால ஊர்திகள்

தமிழகத்திலுள்ள மத்திய சிறைகள், மகளிர் மற்றும் 10 மாவட்டச் சிறைகளுக்கு ரூ.2.19 கோடியில் அவசரகால ஊர்திகள் விரைவில் வாங்கப்படும் என்றார் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.
 திருச்சி மத்திய சிறையில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறைக்காவலர்களின் ஆறுமாதக் கால அடிப்படைப் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, சிறந்த காவலர்களுக்குப் பதக்கங்களை வழங்கி மேலும் அவர் பேசியது:
 மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே சிறைத் துறையில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்திய அளவில் தமிழக சிறைத்துறை முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தொழிற்கூடங்களை மேம்படுத்தவும், புதிய தொழிற்கூடங்களை உருவாக்க 2017-18 ஆம் ஆண்டில் ரூ.11.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
 சிறைச்சாலைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், செல்லிடப்பேசிகளை செயல்பாடுகளைத் தடை செய்யும் ஜாமர் கருவி, ஸ்கேனர் வசதிகள், சிசிடிவி வசதி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ள மாநிலம் முழுவதும் உள்ள மத்தியச் சிறைகளில் அமைக்க ரூ.13.94 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.
 மாநிலத்திலுள்ள மத்திய சிறைகள், மகளிர் சிறைகள், 10 மாவட்ட சிறைகள்உள்ளிட்டவற்றில் 21 வகையான கருவிகளுடன் அவசர கால ஊர்திகள் ரூ.2.19 கோடியில் வாங்குவதற்கு கொள்முதல் பணி நடைபெற்று வருகின்றன. கைதிகளுக்காக ரூ.14.55 லட்சத்தில் 96 வானொலி பெட்டிகள், 344 ஒலிப்பான்கள் வாங்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.
 சிறைவாசிகள் 100 சதவிகித கல்வியறிவு பெற்றவர்களாக உருவாக்கும் வகையில் ஆரம்ப, தொடக்க, மேல்நிலைக் கல்வி வழங்கவும், திறந்தெவளி பல்கலைக்கழகம் மூலம் பட்டம், பட்டயப்படிப்புகளை பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிர்வாகத் துறையின் மூலமாக திருச்சி மத்திய சிறையில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டு, உள்கட்டமைப்புப் பணிகளை ஏற்படுத்த ரூ.3.82 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்வர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 6 சிறை அலுவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். உதவிச் சிறை அலுவலர்களாக 101 பேர் தேர்வு செய்யப்பட்டு, 83 பேருக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
 காவலர் சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1015 சிறைக் காவலர்கல் தேர்வு செய்யப்பட்டு, திருச்சி, கோவை, வேலூர், சேலத்தில் பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் தற்போது பயிற்சியை நிறைவு செய்திருக்கின்றனர். மாவட்டச் சிறைகள், மகளிர் சிறைகள், கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 47 சமையலர் பணியும், 31 துப்புரவுப் பணியாளர் பணியிடங்களும் நிரந்தரப் பணியிட அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணியில் சேரும் காவலர்கள் ஒழுக்கம் மற்றும் கண்ணியத்துடன் பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் சண்முகம்.
 முன்னதாக, சிறைக்காவலர்களின் அணிவகுப்பும், நிறைவில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறைத்துறைத் தலைவர் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆசுதோஷ் சுக்லா வரவேற்றார். சிறைத்துறை டி.ஐ.ஜி. ( தலைமையிடம்) ஆர். கனகராஜ், திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை சரக சிறைத்துறைத் துணைத் தலைவர் இரா. அறிவுடைநம்பி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com