நிர்மலாதேவியிடம் சிறையில் விசாரணை: முழு ஒத்துழைப்பு அளித்ததாக குழுத் தலைவர் சந்தானம் தகவல்

மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதான புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நிர்மலாதேவியிடம் சிறையில் விசாரணை: முழு ஒத்துழைப்பு அளித்ததாக குழுத் தலைவர் சந்தானம் தகவல்

மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதான புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் ஆளுநரால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் ஆர். சந்தானம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
 விசாரணையின்போது நிர்மலாதேவி முழு ஒத்துழைப்பு அளித்தார் என்று சந்தானம் பின்னர் தெரிவித்தார்.
 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணிதத் துறை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி. இவர் சில வாரங்களுக்கு முன்பு தனது துறை மாணவியரிடம் செல்லிடப்பேசியில் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட பின்னர், தற்போது மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் சிறப்புக் குழுவை அமைத்தார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானம் தலைமையிலான குழுவில் அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகப் பேராசிரியை டி. கமலி, வேளாண்மைக் கல்லூரி மண்ணியல் மற்றும் சுற்றுச்சூழலில் துறை பேராசிரியை எஸ். தியாகேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 சிறப்புக் குழுவினர் கடந்த 21-ம் தேதி முதல் கட்ட விசாரணையைத் தொடங்கினர். இரண்டாம் கட்ட விசாரணையை புதன்கிழமை தொடங்கினர். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடத்திய பின்னர் பல்கலைக்கழகத்திலும் விசாரணை நடத்தினர்.
 இந்நிலையில், வியாழக்கிழமை காலை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியை விசாரிக்க குழுவினர் சென்றனர். காலை 9.30 மணிக்கு சிறைக்குள் சென்ற குழுவினர் பகல் 1.30 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தினர்.
 விசாரணை குறித்து குழுத் தலைவர் ஆர். சந்தானம் கூறியது: சிறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினோம். நிர்மலாதேவி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து வெளிப்படையாக கூற முடியாது என்றார்.
 தொடர்ந்து, வியாழக்கிழமை மதியம் 2.30 மணிக்கு மீண்டும் மத்திய சிறைக்குச் சென்ற சிறப்புக் குழுவினர் நிர்மலாதேவியிடம் விசாரணையைத் தொடர்ந்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணை விவரத்தை குழுவினர் பதிவு செய்ததாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 ஆவணங்கள் தாக்கல்: பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிறப்புக் குழுவினர் விசாரணை நடத்திய நிலையில், பகலில் அக்குழுவினர் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அப்போது அவர்களிடம் மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத் தரப்பிலிருந்து சில ஆவணங்கள் வழங்கப்பட்டன.
 அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி நிர்வாகப் பிரச்னைகள், அதுதொடர்பான விசாரணை விவரங்கள் உள்ளிட்டவை ஆவணங்களாக குழுவினரிடம் வழங்கப்பட்டதாக கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com