தமிழகத்தின் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுவினை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

புது தில்லி: தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுவினை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பல்வேறு மாநில அரசுகளினால் வழங்கப்படும் இட ஒதுக்கீடானது 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று 1992-ஆம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் 1994-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டத்தின் படி தமிழகத்தில் மட்டும் 69%  இட ஒதுக்கீடானது கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. 

இதன் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையிலும் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக தங்களுக்கான வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும், எனவே மருத்துவக் கல்வியில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டுமென்றும் கூறி, பொதுப்பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அத்துடன் தமிழகத்தின் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென்றும் அவர்கள் தங்கள் மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். மூத்த வழக்கறிஞர் விஜயன் இதுவரை மாணவர்கள் சார்பாக வழக்கினை நடத்தி வந்தார்.

சுமார் 25 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் இதுவரை முழுமையான விவாதங்கள் நடைபெறாமல் இருந்து வந்தது. அவ்வப்பொழுது மாணவர்கள் சிலரின் மருத்துவ சேர்க்கைக்கான உத்தரவுகள் மட்டும் பிறப்பிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுவினைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் புதனன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

செவ்வாயன்று இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் கூறியதாவது:

ஒரு மருத்துவக் கல்லூரியில் எத்தனை இடங்களிருக்கிறதோ அதற்கு மேல் கூடுதலாக இடங்களை ஒதுக்க இந்த நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட முடியாது. எனவே மாணவர்களின் மனுவானது தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அவர்கள் உத்தரவிட்டனர்.

அதே சமயம் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுவினை மாணவர்கள் தனியாக  தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com