கருணாநிதி உடல் நலம்: அஜீத் சிங், நடிகர்கள் விஜய், அஜித் விசாரிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அஜீத் சிங், நடிகர்கள் விஜய், அஜித், உள்ளிட்டோர் புதன்கிழமை நலம் விசாரித்தனர்.
கருணாநிதி உடல் நலம்: அஜீத் சிங், நடிகர்கள் விஜய், அஜித் விசாரிப்பு


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அஜீத் சிங், நடிகர்கள் விஜய், அஜித், உள்ளிட்டோர் புதன்கிழமை நலம் விசாரித்தனர்.
ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
மேலும் சில நாள்களுக்கு...: கல்லீரல் மற்றும் ரத்தத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்காக மருத்துவமனையில் மேலும் சில நாள்கள் கருணாநிதி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. 
5-ஆவது நாள் சிகிச்சை: தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கருணாநிதிக்கு 5-ஆவது நாளாக மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தனர். இதில், அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
அஜீத் சிங் நலம் விசாரிப்பு: இந்த நிலையில், ராஷ்ட்ரிய லோக் தளம் நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜீத் சிங் மருத்துவமனைக்கு புதன்கிழமை காலை 11.40 மணிக்கு வந்தார். அவரை திமுகவின் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.கே.சேகர்பாபு வரவேற்று அழைத்துச் சென்றார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து அஜீத் விசாரித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் அஜீத் சிங் கூறியது: கருணாநிதி விரைந்து குணமடைய என்னுடைய வாழ்த்துகளைக் கூறினேன். அவர் இந்தியாவின் மூத்த, தலை சிறந்த தலைவர் ஆவார்.
கருணாநிதியுடன் 1980, 90-களில் நல்ல தொடர்பில் இருந்தேன். தமிழகத்தின் நிலவரங்களை முழுமையாக அறிந்தவனாகவும் இருந்தேன். இந்தியா முழுவதும் கருணாநிதியை நினைவில் வைத்திருக்கும் மக்களை இப்போதும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றார் அஜீத் சிங்.
அகிலேஷ் யாதவ் விசாரிப்பு: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல் நலம் தொடர்பாக விசாரித்தார்.
பிறகு அவருடைய சுட்டுரையில், கருணாநிதி விரைந்து குணமடையை வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பழைய நிலைக்கு அவர் திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
நடிகர்கள் விஜய்-அஜித் விசாரிப்பு: மருத்துவமனைக்கு காலை 10 மணிக்கு விஜய் வந்தார். மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார். நடிகர் அஜித் இரவு 8.40 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தார். மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். நடிகர்கள் கவுண்டமணி, விவேக் உள்பட ஏராளமானோர் மருத்துவமனையில் நலம் விசாரித்தனர்.


தொண்டர்கள் வருகை குறைந்தது: கடந்த 4 நாள்களாக தொண்டர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவனையிலிருந்து லஸ் செல்லும் செல்லும் சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டது. கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து புதன்கிழமை மருத்துவமனைக்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதை தொடர்ந்து, லஸ் செல்லும் சாலை இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டது.  

உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்
திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயலில் ஈடுபடக்கூடாது என்று அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கருணாநிதி உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் 21 தொண்டர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மன அழுத்தத்தில் உறைந்து போயிருக்கிறேன். கருணாநிதியின் உடல்நலக் குறைவால் ஏற்பட்டுள்ள சோகத்துடன், தொண்டர்கள் இறந்துள்ளனர் என்ற செய்தி என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
காவேரி மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது.
மருத்துவர்கள் அடங்கிய குழு தொடர்ந்து சிகிச்சையளித்து, அவரின் உடல்நிலையை கண் அயராது கண்காணித்து வருகிறது. கொட்டும் மழையில் நனைந்து கொண்டே தலைவா வா என்று எழுப்பிய அந்த உயிர்த்துடிப்பான உணர்ச்சி மிகு முழக்கங்கள் சிறிதும் வீண் போகவில்லை என்பதற்கு அடையாளமாக கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
திமுக உடன்பிறப்புகளில் ஒருவரை இழந்தால்கூட அந்தச் செய்தி என் மனதை இடிபோல் தாக்குகிறது. 
அண்ணா கற்றுக்கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை மனதில் தாங்கி அதை வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய கருணாநிதிக்கு பெருமை சேர்க்க வேண்டுமே அன்றி, யாரும் தங்களின் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com