ஜூலை 18 முதல் இன்று வரை... கருணாநிதியின் மருத்துவமனை சிகிச்சை விவரம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் திங்கள்கிழமை (இன்று) 6-ஆவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 18 முதல் இன்று வரை... கருணாநிதியின் மருத்துவமனை சிகிச்சை விவரம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் திங்கள்கிழமை (இன்று) 6-ஆவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வந்த கருணாநிதி அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். 

மூச்சுத் திணறலால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்த கருணாநிதிக்கு, எளிதாக மூச்சுவிட வசதியாக அவருக்கு  கடந்த ஜூலை 18-ஆம் தேதி புதிய டிரக்கியோஸ்டமி குழாய் மாற்றி பொருத்தப்பட்டது. இதையடுத்து, கருணாநிதி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். 

காவேரி மருத்துவமனையின் முதல் அறிக்கை:

கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை கடந்த ஜூலை 26-ஆம் தேதி முதல் அறிக்கையை வெளியிட்டது. 

அதில், "திமுக தலைவர் கருணாநிதிக்கு இயல்பான முதுமையின் காரணமாக உடல்நலிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரகத் தொற்றின் காரணமாக காய்ச்சல் உண்டாகி அதற்கு தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது வயது மற்றும் உடல்நிலை கருதி அவரை யாரும் வந்து பார்க்க வேண்டாம்" என்று கூறப்பட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஜூலை 27-ஆம் தேதி, "கருணாநிதி உடல் நலத்தில் முன்னேற்றம் கண்டுள்ளார்" என்று பேட்டியளித்தார். 

காவேரி மருத்துவமனையில் அனுமதி:

வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைபாடு காரணமாக ஜூலை 28-ஆம் தேதி அதிகாலை உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

காவேரி மருத்துவமனையின் 2-ஆவது அறிக்கை:

ஜூலை 28-ஆம் தேதி அதிகாலை காவேரி மருத்துவமனை வெளியிட்ட 2-ஆவது அறிக்கையில் "கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு காரணமாக ஜூலை 28 ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள்  அளித்த சிகிச்சையால் தற்போது  உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மேலும்  ரத்த அழுத்தம் சீராக உள்ளது. தொடர்ந்து கருணாநிதியின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

காவேரி மருத்துவமனையின் 3-ஆவது அறிக்கை:

ஜூலை 28-ஆம் தேதி இரவு 8 மணிக்கு காவேரி மருத்துவமனை 3-ஆவது அறிக்கையை வெளியிட்டது. அதில், "மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது.  தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ நிபுணர்குழு மூலம் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்" என்று கூறப்பட்டிருந்தது.

கருணாநிதி சிகிச்சை பெறும் முதல் புகைப்படம் வெளியீடு:

காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியை குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு ஜூலை 29-ஆம் தேதி நேரில் சந்தித்தார். வெங்கய்ய நாயுடு சந்தித்த புகைப்படம் அன்று வெளியிடப்பட்டது. கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. 

காவேரி மருத்துவமனையின் 4-ஆவது அறிக்கை:

வெங்கய்ய நாயுடு சந்தித்த அதே ஜூலை 29-ஆம் தேதி இரவு காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் காவேரி மருத்துவமனைக்கு விரைந்ததால் அங்கு மீண்டும் பரபரப்பான சூழ்நிலை தென்பட்டது. இந்நிலையில், இரவு 9.50 மணிக்கு காவேரி மருத்துவமனை 4-ஆவது அறிக்கையை வெளியிட்டது. அதில், "திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. தற்போது மருத்துவ உதவிகளுடன் அவருடைய உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவ நிபுணர்குழு அவரை தொடர்ந்து கண்காணித்து  சிகிச்சை அளித்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருணாநிதி சிகிச்சை பெறும் 2-ஆவது புகைப்படம் வெளியீடு:

திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூலை 31-ஆம் தேதி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த புகைப்படத்தில் கட்டிலில் கண் திறந்த நிலையில் பாதி சாய்ந்தபடியிருக்கும் கருணாநிதியிடம் ஸ்டாலின் காதில் குனிந்து ஏதோ சொல்வது போன்று இருந்தது. அதே நேரம் சற்றுத் தொலைவில் ராகுல் நின்று கொண்டிருப்பார். அவர்களுடன் தயாநிதிமாறன் உடன் இருந்தார்.

கருணாநிதி கண் திறந்திருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை கண்ட தொண்டர்கள் மேலும் மகிழ்ச்சியில் கொண்டாடினர். 

காவேரி மருத்துவமனையில் 5-ஆவது அறிக்கை:

ராகுல் காந்தி சந்தித்த அதே தினம் மாலையில் காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை குறித்து 5-ஆவது அறிக்கையை வெளியிட்டது. அதில், "திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்த குறைபாடு காரணமாக 28/07/2018 அன்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்டு வந்தார். 

28/07/2018 அன்று மூச்சுத் திணறால் அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பிறகு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு அவர் நன்கு ஒத்துழைத்தார்த இதையடுத்து, அவருடைய உடல் நிலை சீரான நிலை திரும்பியது. இருப்பினும், வயது மூப்பு காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுள்ளது. 

அவர் மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சீரான நிலையிலேயே உள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாளின் முதல் வருகை:

கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் சந்திக்க வராத அவரது மனைவி தயாளு அம்மாள் முதன்முதலாக திங்கள்கிழமை (இன்று) காவேரி மருத்துவமனைக்கு வந்தார். இதனால், அவருடைய உடல்நிலை குறித்து மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை குறித்து 6-ஆவது அறிக்கையை வெளியிட்டது. 

காவேரி மருத்துவமனையின் 6-ஆவது அறிக்கை:

இந்த அறிக்கையில், "கருணாநிதியின் உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  அவரது வயது மூப்பு தொடர்புடைய பிரச்னைகளின் காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை இயல்பாக வைத்திருப்பது சவாலாக உள்ளது.

அவர் தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.  அடுத்த 24 மணிநேரத்தில் அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் எதிர்வினையாற்றுவதைப் பொறுத்தே எதையும் முன் கணிக்க முடியும்" என்று கூறப்பட்டிருந்தது. 

இதனால், காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்தான பதற்றம் மீண்டும் தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காவேரி மருத்துவமனை சார்பில் அடுத்த அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட முதல் அறிக்கையை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நேரில் சந்தித்தும், ஸ்டாலினிடமும் நலம் விசாரித்து வருகின்றனர். 

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், இலங்கை எம்.பி-க்கள், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் நிர்மால சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், திரையுலகினர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து நலம் விசாரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com