நேரு முதல் மோடி வரை கருணாநிதி கண்ட அரசியல் தலைவர்கள்!

நினைவருக்கும் வரை எழுத்தை கலைஞர் கைவிடவில்லை. அவரது மூச்சு, பேச்சு என எல்லாவற்றிலும் தமிழ் நிறைந்திருந்தது
நேரு முதல் மோடி வரை கருணாநிதி கண்ட அரசியல் தலைவர்கள்!

நினைவருக்கும் வரை எழுத்தை கலைஞர் கைவிடவில்லை. அவரது மூச்சு, பேச்சு என எல்லாவற்றிலும் தமிழ் நிறைந்திருந்தது. வயோதிகம் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, ஆகஸ்ட் 7, மாலை 6.10 மணியளவில் காலமானார்.

கலைஞர் என்று ரசிகர்கள் அவரை அன்பொழுக அழைத்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான கருணாநிதியின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே நலமின்றி இருந்தது. அஞ்சா நெஞ்சம் கொண்ட கழகத் தலைவர் மருத்துவமனையில் இருப்பதை விட தமது கோபாலபுரத்து வீட்டில் ஓய்வில் இருக்கவே விரும்பினார். கடந்த மாதம் ஜூலை 28-ம் தேதி அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது.

திருக்குவளை எனும் குக்கிராமத்தில் ஜூன் 3, 1924-ம் ஆண்டு பிறந்தவர் கலைஞர் கருணாநிதி . இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் ஏற்பட, தமது 14 வயதில் அதற்கான பணியைத் தொடங்கினார். சொற்களில் விற்பன்னரான அவர், எழுத்தாளரானதில் வியப்பில்லை. கதை, கவிதை என படைப்பாற்றலால் தம்மை வெளிப்படுத்தத் தொடங்கினார். அவருடைய செறிவான கூர்மையான எழுத்துக்களே அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திச் சென்றது என்றால் மிகையில்லை. இசையிலும் அவர் தேர்ந்தவர். இயல் இசை நாடகம் என முத்தமிழிலும் வித்தகராய் அவர் திகழ்ந்தார். திராவிடக் கொள்கைகளை அவர் வரையறைத்து முன்னெடுத்துச் சென்றதற்கு ஒரு முக்கிய பங்கு இவை வகித்தன. 50 படங்களுக்கு மேலாக திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் கலைஞர். வயது என்பது அவரைப் பொருத்தவரையிலும் ஒரு எண் மட்டுமே. அவரது ஆளுமையும், எழுத்தாற்றலும் ஒரு போதும் சோர்வுறாத திண்மையான மனமும் அவரை எல்லா வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்தன. தமது 90 வயதிலும் கூட அவர் தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதைகளை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் சதுரங்கத்தில் அவரைப் போல் காய்களை நகர்த்தியவர் வேறொருவர் இருக்க முடியாது. அவர் கடந்த ஐம்பதாண்டுகளில் மத்திய அரசாங்கத்தில் பல தலைவர்களைப் பார்த்தவர். அச்சமயங்கள் தோறும் தமிழகத்தில் தமது கட்சியின் முன்னேற்றத்தை மேன்மேலும் ஸ்திரப்படுத்தினார். 1969-ம் ஆண்டு, இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். 

வி.வி.கிரி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்திரா காந்திக்கு கருணாநிதி ஆதரவளித்தார், பின்னர் காங்கிரஸ் மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வர் ஆனார் கருணாநிதி. ஆனால் இரண்டு தலைவர்களுக்கிடையிலான உறவு விரைவில் நீர்த்துப் போனது. கருணாநிதி இந்திரா காந்தியின் கெடுபிடிகளைச் சமாளிக்க தமது அரசியல் திறன்களையும் பயன்படுத்தினார். 

1975-ல் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தை அறிவித்த ஒரு ஆண்டுக்குப் பின், ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து கருணாநிதியின் அரசாங்கத்தை கலைத்தார்.  மீண்டும் 1991-ம் ஆண்டு மத்திய அரசின் கோபத்திற்கு கருணாநிதி உள்ளாக நேர்ந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டது என அவரது ஆட்சி கலைக்கபட்டது. இந்த இரண்டு முறையும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பும், மக்கள் கடும் அதிர்ச்சிக்கும் உள்ளாகினர்.

அதன் பின்னர் கருணாநிதியின் தி.மு.க. கட்சி 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது, ஆனால் 2001 தேர்தலில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.விடம் தோற்றுவிட்டது. பின்னர் 2006-ல் ஜெயலலிதாவிலிருந்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதன் பின் கருணாநிதி ஐந்து ஆண்டு காலப் பதவியை முழுமையாக நிறைவு செய்தார். அதனையடுத்து, 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவில்லை.

ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்ம ராவ், ஹெச்.டி. தேவகெளடா, ஐ.கே.குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் 1980-லிருந்து 2011-ம் ஆண்டு வரை கலைஞர் கருணாநிதி கடந்து வந்த அரசியல் தலைவர்கள் ஆவார்கள்.

நவம்பர் 2017-ல் பிரதமர் மோடி சென்னையில் கருணாநிதியின் வீட்டிற்கு திடீர் வருகை புரிந்தார். சென்னை கோபாலபுரத்துக்கு கலைஞரை சந்திக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் வந்தார். கலைஞர் கருணாநிதியின் கையை ஆதுரமாகப் பிடித்து நலம் விசாரித்தார் மோடி. முரசொலி பவளவிழா மலரை பிரதமர் மோடிக்கு கருணாநிதி பரிசாக வழங்கினார். 

தி.மு.க தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி திடீரெனச் சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலவிதமான ஊகங்களை எழுப்பியது. இதற்கு ஒரு நாள் முன்னர்தான், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கின் முக்கிய விசாரணையில் ஏ. ராஜா, கனிமொழி ஆகியோரின் பெயர்கள் வெளியாகியிருந்தது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வின் ஆதரவை பெறவே மோடி கருணாநிதியை சந்தித்தார் என்ற பேச்சும் எழுந்தது.

இப்படி நேரு முதல் மோடி வரை கருணாநிதி பல அரசியல் தலைவர்களையும், மத்தியிலிருந்து வந்த நெருக்கடிகளையும் தமது சாதுர்யத்தால் கடந்து வந்துள்ளார். சோதனைகள் பல வந்து சேர்ந்தாலும் அவற்றையெல்லாம் சாதனையாக மாற்றிக் காட்டி தமிழகத்தையும் தமிழனையும் தலைநிமிர்த்த செய்தவர் கலைஞர் கருணாநிதி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com