கண்ணீரில் மிதந்த கண்ணாடிப் பேழை!

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிப் பயணம் ராஜாஜி அரங்கம் அமைந்துள்ள சிவானந்தா சாலையில் தொடங்கி காமராஜர் சாலையில் புதன்கிழமை மாலை நிறைவு பெற்றது.
கண்ணீரில் மிதந்த கண்ணாடிப் பேழை!


திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிப் பயணம் ராஜாஜி அரங்கம் அமைந்துள்ள சிவானந்தா சாலையில் தொடங்கி காமராஜர் சாலையில் புதன்
கிழமை மாலை நிறைவு பெற்றது.
ஒத்துழைப்பு தர வேண்டுகோள்: கருணாநிதியின் உடல் அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. எனவே, இறுதி ஊர்வலத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அங்கு திரண்டிருந்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்து செல்லுமாறு மு.க.ஸ்டாலின் கூறினார். 
ராணுவக் கட்டுப்பாட்டில் அரங்கம்: கண்ணாடிப் பேழையில் உடல் வைக்கப்பட்டிருந்த பகுதியானது, பிற்பகல் 3.30 மணியளவில் முழுவதுமாக ராணுவக் கட்டுப்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ராஜாஜி அரங்கத்தின் படிகளில் நின்றிருந்தவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். அந்தப் பகுதியில் இரண்டு புறங்களிலும் போலீஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இறுதி ஊர்வலம் புறப்படத் தயாரான போது கருணாநிதியின் மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
ராணுவ வாகனத்தில் கண்ணாடிப் பேழை: முப்படை வீரர்கள் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையை சுமந்து வந்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் உடல் ஏற்றப்பட்டது. மொத்தம் மூன்று ராணுவ வாகனங்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றன. முதல் இரண்டு வாகனங்களில் முப்படை ராணுவ வீரர்கள் நிரம்பியிருந்தனர்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்றாவது வாகனத்தின் இணைப்பாக கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழை வைக்கப்பட்டிருந்தது.
பிரியா விடை: ராஜாஜி அரங்கத்தில் இருந்து மாலை 4 மணியளவில் மெரீனா கடற்கரை நோக்கி கருணாநிதியின் இறுதிப் பயணம் தொடங்கியது. அந்தப் பகுதி முழுவதும் திரண்டிருந்த பொதுமக்களும் தொண்டர்களும் கைகளை அசைத்தும், ஆவேசமாகக் கதறி அழுது கண்ணீர் துளிகளாலும் பிரியா விடை கொடுத்தனர். திமுக கொடியை ஏந்தி வாழ்க வாழ்க கலைஞர் புகழ் வாழ்க' என்று முழக்கங்களை எழுப்பிய வண்ணம் வாகனத்தின் முன்னாலும் பின்னாலும் தொண்டர்கள் ஊர்வலகமாகச் சென்றனர். சிலர் வாகனத்தின் மீது மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர்.
கருணாநிதியின் முகம் பதித்த பேனர்களையும், வாசகங்கள் எழுதிய கருப்புக் கொடியையும் சுமந்தபடி தொண்டர்கள் வாகனத்தைச் சூழ்ந்து சென்றனர். சாலையின் இரு புறங்களிலும், உயரமான கட்டடங்களிலும் ஏராளமானோர் ஏறி நின்று ஊர்வலத்தைப் பார்த்தனர். லட்சக்கணக்கானோர் ஊர்வலத்தில் பங்கேற்றதால் கட்டுக் கடங்காத கூட்டத்தின் காரணமாக ராணுவ வாகனங்கள் மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்தபடி சென்றன.
வாகனத்தைத் தவிர்த்த வாரிசுகள்: கருணாநிதியின் மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட உறவினர்கள், உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் செல்லாமல் நடந்தே இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் உள்ளிட்டோரும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பெரியார், அண்ணா சிலைகளை கடந்து...ராஜாஜி அரங்கத்திலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம் சிவானந்தா சாலையில் தொடங்கி பெரியார் சிலை, அண்ணா சிலை, வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கம், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கம், எழிலகம், பாபு ஜெகஜீவன் ராம் சிலை, உழைப்பாளர் சிலை வழியாக காமராஜர் சாலையை மாலை 6 மணியளவில் அடைந்தது. அங்கிருந்து மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தை 6.15 மணிக்குச் சென்றடைந்தது.
அண்ணா நினைவிடப் பகுதிக்குள் ராணுவ வாகனம் சென்றதும், அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடற்கரைச் சாலையில் திரும்பிய திசை எல்லாம் மக்கள் தலைகளே தென்பட்டன.

மறைவுக்குப் பிறகும் போராடி வெற்றி: மு.க.ஸ்டாலின் கண்ணீர்


திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கேள்விப்பட்ட அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
ஆரவாரக் குரல்: மெரீனா கடற்கரையில் துயில்வதற்காக மறைவுக்குப் பிறகும் கருணாநிதி போராடி வெற்றி பெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அதைக் கேட்டு கூடியிருந்த மக்கள் ஆரவாரக் குரல் எழுப்பினர்.
காவேரி மருத்துவமனையில் 11 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார். 
அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தபோதே மெரீனாவில் அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் மூத்த 
உறுப்பினர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்று இது தொடர்பான கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. சட்டச் சிக்கல் உள்ளதாகக் கூறி மெரீனாவில் இடமளிக்க தமிழக அரசு மறுத்தது. இதனையடுத்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்ற வழக்கின் வாதத்தின் தீர்ப்பு, புதன்கிழமை காலை 11 மணியளவில் வெளியானது. கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரையில் இடம் ஒதுக்க உத்தரவிட்டு தீர்ப்பு வெளியானது.
கட்டிப் பிடித்து கண் கலங்கிய குடும்பத்தினர்...: கருணாநிதி உடலின் அருகில் நின்றுகொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு செல்லிடப்பேசி மூலம் தீர்ப்பின் விவரம் தெரிவிக்கப்பட்டது. சாதகமான தீர்ப்பு வெளியானதை அருகில் நின்று கொண்டிருந்த கனிமொழியின் மகன் ஆதித்யாவிடம் தெரிவித்தார். இருவரும் கட்டிப் பிடித்து கண் கலங்கினர்.
ஸ்டாலினைத் தேற்றிய கனிமொழி: தீர்ப்பு விவரத்தை அறிந்த உடன் மு.க.ஸ்டாலின் தொண்டர்களைப் பார்த்து கை கூப்பி வணங்கியவர், நெகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். அருகில் இருந்த துரைமுருகன், ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகிய கட்சியின் மூத்தத் தலைவர்கள் கலங்கிய கண்களுடன் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். கனிமொழியும் அவர் அருகில் வந்து ஸ்டாலினைத் தேற்றினார்.
ராஜாஜி ஹாலில் திரண்டிருந்த தொண்டர்களுக்கும் தீர்ப்பு குறித்த விவரம் அறிவிக்கப்பட்டது. இதனால், அங்கிருந்த தொண்டர்கள், வாழ்க வாழ்க வாழ்கவே' என்று கோஷமிட்டு தீர்ப்பை வரவேற்றனர்.
அப்போது தொண்டர்களிடம் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், உயிரோடு இருந்தபோது மட்டுமல்ல; இறந்த பிறகும் கருணாநிதி போராடி வெற்றிபெற்றுள்ளார்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அப்போது தொண்டர்கள் பெருத்த குரல் கொடுத்தனர்.
சோகத்திலும் மகிழ்ச்சி: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான நிலையில் சோகத்திலும் தொண்டர்கள் , தலைவர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com