95 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 95 அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


தமிழகத்தில் 95 அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 95 அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்திட அனுமதி வழங்கப்படுகிறது. 
தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.39,900- ரூ.1,16,600 என்ற ஊதிய நிலையில் உள்ள உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை ரூ.56,900- ரூ.1,80,500 என்ற ஊதிய நிலையில் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்திட ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.
மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் 95 அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ரூ.36,900- ரூ.1, 16,600 என்ற ஊதிய நிலையில் முதல் கட்டமாக 6 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு) பாட வாரியாக ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறை, வழிமுறைகளின்படி நிரப்பிட வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியமர்த்தப்படுவோர் அந்தப் பணியிடங்களுக்குரிய ஊதியம், ஏனைய படிகளை பெறத் தகுதியுடையவர்களாவர்.
தரம் உயர்த்தப்படும் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஊரகப் பகுதியில் உள்ள பள்ளிகளில் 15 மாணவர்களும், நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் 30 மாணவர்களும் அந்தக் கலைப்பிரிவில் சேரும் பட்சத்தில், அந்தப் பள்ளிகளுக்கு கூடுதலாக மேலும் 3 முதுநிலைப் பட்டதாரி பணியிடங்களை (வரலாறு, பொருளியல், வணிகவியல்) பாடவாரியாக இரண்டாம் கட்டமாக ஒப்பளிப்பு செய்யக்கோரி பள்ளிக் கல்வி இயக்குநரிடமிருந்து மீண்டும் கருத்துரு பெறப்பட்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும்.
இதே போன்று அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் பிறப்பித்துள்ள மற்றொரு அரசாணையில் கூறியிருப்பதாவது:
95 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு: தமிழகத்தில் 95 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும், 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 6 முதல் 10 வகுப்புகளில் படிக்கும் மாணவியரைப் பிரித்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளாக உருவாக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. 
தரம் உயர்த்தப்படும் 95 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படும் 100 தலைமையாசிரியர் பணியிடங்களை தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்களை (ரூ.36,000- ரூ.1,14,000) நிலை உயர்த்தி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களாக அனுமதித்திடலாம். 
நிலை உயர்த்தப்படும் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 100 பள்ளிகளுக்கு 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (ஊதிய நிலை- ரூ.35,900- ரூ.1,13,500) புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது. 
இவ்வாறு நிலை உயர்த்தப்படும் 95 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் 1 முதல் 5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுகிறது. அந்தப் பள்ளிகளுக்கு ஒரு தலைமையாசிரியர் வீதம் 95 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் (ஊதியநிலை- ரூ.35,900- ரூ.1,13,500) புதிதாகத் தோற்றுவிக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com