எழுத்தாளர் பாரதி சுராஜ் காலமானார்

பாரதி கலைக்கழகத்தின் தலைவரும் எழுத்தாளருமான பாரதி சுராஜ் (92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை (ஆக.9) காலமானார். அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
எழுத்தாளர் பாரதி சுராஜ் காலமானார்


பாரதி கலைக்கழகத்தின் தலைவரும் எழுத்தாளருமான பாரதி சுராஜ் (92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை (ஆக.9) காலமானார். அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
பாரதி சுராஜின் இயற்பெயர் சௌந்தரராஜன். இதை சுராஜ் எனச் சுருக்கியவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு. வசதியற்ற பெரிய குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் கட்டணச் சலுகை பெற்று ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் படித்தார். பள்ளிப் பருவத்தில் அமரர் கல்கியிடம் பாரதி கவிதை நூல் பரிசு வாங்கியதிலிருந்து பாரதி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார்.
லயோலா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தபோது ஜெரோம் டிசௌசாவின் அன்பையும் உதவியையும் பெற்றார். அந்தக் கல்லூரியின் தமிழ்ச் சங்கத்தில் துணைச் செயலராக இருந்தார்.
1951-ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் பாரதி கலைக் கழகத்தை சுராஜ் தொடங்கினார். தொடக்க விழாவில் பரலி சு. நெல்லையப்பர், நாரண துரைக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெ. சாமிநாத சர்மா, கி.வா.ஜ., அ.சீனிவாசராகவன், சௌந்தரா கைலாசம், அவ்வை நடராசன், ஆரா. இந்திரா, எஸ். நல்லபெருமாள் போன்ற பல தமிழறிஞர்கள் இந்த அமைப்பில் பேசியுள்ளனர். 
பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதியவர்: சுராஜ் தொடக்க காலத்தில் அதிக எண்ணிக்கையில் சிறுகதைகளை எழுதினார். சுதேசமித்திரன், தினமணி கதிர், குமுதம், போன்ற பத்திரிகைகளில் இவரது பல சிறுகதைகள் வெளியாகியுள்ளன. சிவாஜி' இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர். எழுத்தாளர்களைப் பற்றிய நகைச்சுவைத் தொடர் ஒன்றையும் சிவாஜி பத்திரிகையில் எழுதினார். தினமணி, திருமால், ஆலய தரிசனம், சப்தகிரி, கடவுள், காமகோடி என பல பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகின. தினமணி சுடரில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் மதிப்புரைகள் எழுதியுள்ளார்.
விருதுகள், பட்டங்கள்: மபொசி, தீபம் நா.பார்த்தசாரதி, கி.வா.ஜ. ஆகியோர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் வழங்கப்படும் கம்பன் அடிப்பொடி விருது, பாரதி இளைஞர் சங்கம் சார்பில் பாரதி பைந்தமிழ்ச் செல்வர் பட்டம், சென்னை வானவில் பண்பாட்டு மையம் வழங்கும் பாரதி விருது என பல்வேறு விருதுகள், படங்களைப் பெற்றவர். 
பாரதியைக் கடவுள் நிலையிலேயே வைத்து வழிபடும் இவர், சென்னை மத்திய கைலாஷ் ஆலயத்தில் ஆழ்வாராக பாரதி பிரதிஷ்டை செய்யப்பட்டதில் முழு உடன்பாடு உடையவர். பதிவுத் துறையில் சேர்ந்து 40 ஆண்டுகள் பணிபுரிந்து 1986-ஆம் ஆண்டில் முதல் நிலை சார் பதிவாளராக ஓய்வு பெற்றார்.
மறைந்த பாரதி சுராஜின் இறுதிச் சடங்குகள் சென்னை பழவந்தாங்கல் மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. தொடர்புக்கு: 94453 56769
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com