கட்டட விபத்துகளில் அதிகரிக்கும் உயிரிழப்பு: கேள்விக்குறியாகும் வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு

வேலையின்மையாலும் அதிக சம்பளம் உள்ளிட்டவற்றுக்கு ஆசைப்பட்டும் தமிழகம் வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் அவ்வப்போது கட்டடம்
கட்டட விபத்துகளில் அதிகரிக்கும் உயிரிழப்பு: கேள்விக்குறியாகும் வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு

வேலையின்மையாலும் அதிக சம்பளம் உள்ளிட்டவற்றுக்கு ஆசைப்பட்டும் தமிழகம் வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் அவ்வப்போது கட்டடம் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உளளது. 
ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், ஒடிஸா, பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், உணவகங்கள், செங்கல் சூளைகள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு அழைத்து வரப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். 
மேற்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வந்து இங்கு தங்கி, கட்டுமான வேலைகளில்தான் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். 
கடுமையான வேலை-
குறைந்த சம்பளம்.....: பிகார், ஒடிஸா உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஆண்களுக்கு தலா ரூ.200 இல் இருந்து ரூ.250 வரையும், பெண்களுக்கு ரூ.150 இல் இருந்து ரூ.200 வரைதான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என அங்கிருந்து இங்கு வந்து வேலை செய்யும் வடமாநிலத்தவர் கூறுகின்றனர். தற்போதைய விலைவாசியில் மேற்கண்ட சம்பளம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. 
அதே நேரத்தில் தமிழகத்தில் கட்டட வேலைக்கு ஆண்களுக்கு ரூ.500 இல் இருந்து ரூ. 600 வரையும், பெண்களுக்கு ரூ.400 இல் இருந்து ரூ.500 வரையும் வழங்கப்படுகிறது. 
இதனால் தமிழகத்தில் வந்து வேலை செய்தால் குறுகிய காலத்தில் கணிசமான தொகையை சம்பாதித்துக் கொண்டு, ஊர் திரும்பி விடலாம் என நினைத்து, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு, தட்டு முட்டு சாமான்களுடன் தமிழகம் வருகின்றனர். 
தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் யாரும் நேரிடையாக இங்கு வருவதில்லை. இங்கு வேலை செய்ய வடமாநிலத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கென, இடைத்தரகர்கள் இருக்கின்றனர். 
வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரும் இடைத்தரகர்களுக்குரிய பணத்தை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் தந்து விடுவர். 
அதே நேரத்தில் அவர்கள் தங்க பாதுகாப்பான இடம் அமைத்துக் கொடுப்பது கட்டடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பொறுப்பாகும். ஆனால் தமிழகத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் எதுவும், வடமாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. 
புதிதாக கட்டடப்பணிகளை மேற்கொள்ளும் இடம் அருகிலோ, அல்லது அதன் அடித்தளத்திலோதான் பாதுகாப்பற்ற நிலையில் இவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். 
இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த அப்பாவி கூலித் தொழிலாளர்கள் கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னபுலியூர் கிராமத்தில் தனியார் கட்டட தொழிற்சாலை கட்டும் பணியில் ஒடிஸா, பிகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். 
இவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் அமைத்துத் தரப்படாததால் அவர்கள் தொழிற்சாலை அமைவதற்காக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் அருகே தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ஆம் தேதி இரவு அப்பகுதியில் திடீரென பெய்த மழை காரணமாக சுவர் இடித்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் அங்கேயே உடல் நசுங்கி இறந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
இதனைத் தொடர்ந்து சென்னை மௌலிவாக்கத்தில் 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி 11 அடுக்கு மாடிக் கட்டடப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் மொத்தம் 61பேர் சிக்கி உயிரிழந்தனர். 27பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்த 61 பேரில் 35 பேர் ஆந்திர மாநிலத்தையும், 7 பேர் ஒடிஸா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். 
அதே போன்று, திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உப்புரபாளையம் பகுதியில் தனியார் கிடங்கு கட்டும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆந்திர மாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இட வசதி செய்து தரப்படாததால், அவர்கள் அனைவரும் அங்குள்ள 20அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் அருகில் தங்கி வேலை பார்த்து வந்தனர். 
அப்போது 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6-ம் தேதி அப்பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக அந்த சுவர் இடிந்து விழுந்ததில் 11பேர் உறக்கத்திலேயே உயிரிழந்தனர். 
இதே போன்று அண்மையில் சென்னை கந்தன்சாவடி பகுதியில் 8 தளங்களுடன் கட்டப்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில், கடந்த ஜூலை மாதம் 
21-ஆம் தேதி ஏற்பட்ட கட்டட விபத்தில் 32 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். 
தங்குவதற்கு இடம் , பாதுகாப்பான வேலை தேவை.....: தமிழகம் முழுவதும் திருப்பூர், கோவை, மறைமலை நகர், கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், கிண்டி, ஒசூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்து வருகின்றனர். 
இதே போன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலும் கடுமையான (ஆபத்தான) வேலைகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 
இதில் பலர் அவ்வப்போது இயந்திரத்தில் சிக்கியும், உயரமான இடத்தின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
ஆபத்தான நிலையிலும், பாதுகாப்பற்ற நிலையிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்வதைத் தடுக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் இருக்கும் தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள், உரிய பாதுகாப்புடன் வேலை செய்கின்றனரா, தனியார் நிர்வாகங்கள் சார்பில் அவர்கள் தங்கி வேலை செய்வதற்கு பாதுகாப்பான இடவசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதா என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com