கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்து பொதுமக்களும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரும் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மெரீனாவில் கருணாநிதியின் நினைவிடத்தில் வியாழக்கிழமை இரவு மரியாதை செலுத்திய மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், தமிழரசு, செல்வி , கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள்.
சென்னை மெரீனாவில் கருணாநிதியின் நினைவிடத்தில் வியாழக்கிழமை இரவு மரியாதை செலுத்திய மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், தமிழரசு, செல்வி , கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள்.


திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்து பொதுமக்களும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரும் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதியின் பின்புறம் கருணாநிதியின் உடல் புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. 
கருணாநிதியின் புகைப்படம்: கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பந்தல் போடப்பட்டு, பெரிய அளவிலான புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் கொடியும் நடப்பட்டுள்ளது. அந்த இடம் முழுவதும் பூக்களால் உதயசூரியன் வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி: கருணாநிதியின் நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் வந்தார். சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
குடும்பத்தினர் அஞ்சலி: கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வந்தனர். அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. அதனால், அண்ணா நினைவிடத்தில் சிறிது நேரம் ஒதுங்கி நின்ற அவர்கள், பிறகு கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்தனர்.
கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் முதலில் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி ஆகிய 5 பேரும் ஒரே நேரத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு, முரசொலி செல்வம், முரசொலி அமிர்தம், கலாநிதி மாறன், தயாநிதி மாறன், அழகிரியின் மனைவி காந்தி, ஸ்டாலின் மனைவி துர்கா, தமிழரசு மனைவி மோகனா மற்றும் அவர்களின் பிள்ளைகள் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வைரமுத்து அஞ்சலி: கவிஞர் வைரமுத்து, அவரது மகன்கள் கார்க்கி, கபிலன் ஆகியோருடன் நினைவிடத்துக்கு வந்தார். கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால் ஊற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைரமுத்து கூறியது: மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக சமாதியில் பால் ஊற்றி செல்கிறேன். கருணாநிதி இல்லாத தமிழகத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கருணாநிதி எழுதி வைத்த உயிலான சமூக நீதியைக் காப்பாற்றுவது தமிழ்ச் சமுதாயத்தின் கடமை. சூரியன் இல்லாமல் விடியல் வருமா என்பதைப்போல உள்ளது கருணாநிதியின் மறைவு என்றார். 
நடிகை த்ரிஷா கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
விடிய விடிய அஞ்சலி: கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட புதன்கிழமை இரவிலிருந்து திமுவின் தொண்டர்களும் பொதுமக்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வியாழக்கிழமை காலையிலிருந்து கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அனைவரும் வரிசையில் நிறுத்தப்பட்டு, ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். திருப்பூரைச் சேர்ந்த வினோத் கண்ணா என்ற திமுக தொண்டர் கருணாநிதியின் நினைவிடத்தில் மொட்டை அடித்துக் கொண்டார்.
சீரமைப்புப் பணிகள் தீவிரம்: கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் 5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்டதால், இன்னும் பணிகள் முழுமை அடையாமல் இருந்து வருகிறது. சமாதிக்காக பள்ளம் தோண்டப்பட்டதால் மண் குவிக்கப்பட்டுள்ளது. அதனைச் சமதளமாக்கி சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 
போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: தொண்டர்களின் வருகை அதிக அளவில் காணப்படுவதால், அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. மேலும், கட்சியினர் வாகனங்கள் காமராஜர் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com