கருணாநிதி மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கூட்டத்தில், இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தேசத்தின் மிகப் பெரிய தலைவரை இழந்துவிட்டதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தின் முதல்வராக 5 முறை பொறுப்பு வகித்த முதுபெரும் அரசியல்வாதியான கருணாநிதியின் மறைவு மிகப் பெரிய சோகத்தை தந்திருக்கிறது. அரசியலில் முத்திரை பதித்தது மட்டுமன்றி கலைத் துறையிலும், இலக்கியத் துறையிலும் தடம் பதித்தவர் அவர். எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் தன்னகத்தே கொண்டிருந்த தலைவர் கருணாநிதி. தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் நல்கிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதேபோன்று திரைத் துறையிலும் புகழ்மிக்க கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் வலம் வந்தவர் அவர். திராவிடக் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஊடகமாக திரைத் துறையை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
அனைத்து தரப்பினராலும் கலைஞர் என அன்போடு அழைக்கப்பட்ட அவர் தற்போது நம்மிடம் இல்லை. அவரது மறைவு நாட்டுக்கே பேரிழப்பு. கருணாநிதியை இழந்து வாடும் தமிழக மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஒட்டு மொத்த தேசத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது அரசு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலரும் கருணாநிதியின் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com