காரைக்காலில் அதிகரிக்கும் அடையாளம் தெரியாதோர் உயிரிழப்பு: தவிப்புக்குள்ளாகும் காவல் துறையினர்

காரைக்கால் மாவட்டத்தில் அடையாளம் தெரியாதோர் உயிரிழப்பு மாதத்துக்கு 20-க்கும் மேற்பட்டோர் என்ற நிலையில் உயர்ந்து வருகிறது
அடையாளம் தெரியாதவர் குறித்து படத்துடன் விளம்பரப்படுத்த பத்திரிகைக்கு தரப்படும் தகவல் அறிக்கை.
அடையாளம் தெரியாதவர் குறித்து படத்துடன் விளம்பரப்படுத்த பத்திரிகைக்கு தரப்படும் தகவல் அறிக்கை.

காரைக்கால் மாவட்டத்தில் அடையாளம் தெரியாதோர் உயிரிழப்பு மாதத்துக்கு 20-க்கும் மேற்பட்டோர் என்ற நிலையில் உயர்ந்து வருகிறது. காவலர் பற்றாக்குறையால் பல்வேறு பணிகளை செய்ய முடியால் தவிக்கும் காவல்துறையினருக்கு, இந்த நிகழ்வு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
 காரைக்கால் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மதுக்கடைப் பகுதி, ரயில் நிலையம், கடைத்தெரு ஆகிய இடங்களில் பிச்சையெடுப்போர், மனநலம் பாதித்தோர் என பலரும், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதை நிலையிலோ அல்லது இறந்த நிலையிலோ கிடப்பது முந்தைய காலத்தைக் காட்டிலும் தற்போது அதிகரித்து வருகிறது.
 மயக்க நிலையிலோ அல்லது உடல் சுகவீனம் அடைந்தோ கிடப்போரை மருத்துவமனையில் அனுமதிப்பது அல்லது உயிரிழந்துவிட்டால் அவரது சடலத்தை குறிப்பிட்ட நாள்கள் வரை குளிர் பெட்டியில் வைத்து காப்பதும், இவரது விவரத்தை விளம்பரப்படுத்துவதும், பின்னர் உறவினர் வரவில்லையெனில் சடலத்தை அடக்கம் செய்வதிலும் போலீஸாருக்கு அதிகபட்ச சுமை ஏற்பட்டிருக்கிறது. உடல் ரீதியான உழைப்பை ஏற்றுக்கொண்டாலும், பொறுப்பாகும் காவலரின் சொந்த நிதி செலவாவது பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
 கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதும், அதனை பைசல் செய்யும் நடவடிக்கை எடுப்பதும் காவல்துறைக்கு எளிமையாக இருந்தது.
 நீதிமன்றமானது, அடையாளம் தெரியாத சடலம் குறித்து தகவலை பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டு, குறித்த கால அவகாசத்துக்குப் பின்னரே அடக்கம் செய்யவேண்டும் என அறிவுறுத்திவிட்டதால், அதுவரை சடலத்தை மருத்துவமனையில் குளிர் பெட்டியில் பாதுகாக்கவேண்டியுள்ளது.
 கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், வெளியூர்களில் பிச்சையெடுப்போர், மன நிலை பாதித்தவர்கள் காரைக்கால் வருவது அதிகரித்துவிட்டது. பிச்சையெடுப்பில் ஈடுபடுவோரில் பெரும்பான்மையினர் சாராயம் உள்ளிட்ட மதுபானம் அருந்துவோராகவே இருக்கின்றனர். மேலும் தமிழகத்தைக் காட்டிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசப் பரப்பில் மதுக்கடைகள் எண்ணிக்கை அதிகமிருப்பதும், மது விலை குறைவு என்பதும் இவர்களுக்கு சாதகமாகிவிட்டது.
 அளவுக்கு அதிகமான மது பயன்பாட்டால், மதுக்கடை வாயிலிலும், சாலையோரத்திலும் விழுந்து இறந்துவிடுகிறார்கள். ரயில் வசதியும், மதுக்கடைகளும் காரைக்காலில் அடையாளம் தெரியாதோர் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
 இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: சாலையோரத்தில் உடல் சுகவீன நிலையிலோ, இறந்த நிலையிலோ ஒருவர் இருந்தால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அரசு தரப்பு ஆம்புலன்ஸ் வாகனம் தரப்படுகிறது. இதன் பிறகு குறித்த நாள்கள் வரை குளிர்பெட்டியில் வைத்து, சடலத்தை அடக்கம் செய்ய சுடுகாடு கொண்டு செல்ல அரசு தரப்பு ஆம்புலன்ஸ் வாகனம் தரப்படுவதில்லை. தனியார் வாகனம் வரவழைக்கப்பட்டு சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. சுடுகாட்டில் குழி வெட்டி அடக்கம் செய்ய ரூ. 400 முதல் ரூ. 500 வரை செலவு செய்யவேண்டியுள்ளது. ஒரு நபர் இறந்துபோனால் அவரை மருத்துவமனையில் வைத்து அடக்கம் செய்யப்படும் வரை ஏறக்குறைய ரூ. 1,000 வரை காவலர் செலவு செய்ய வேண்டியுள்ளது.
 காவலர் ரோந்துப் பணியில் ஈடுபடும்போது குறிப்பிட்ட பகுதி அவர்களது பணிக்காக ஒதுக்கப்படுகிறது. இந்த பணிக்குரிய இடத்தில் அடையாளம் தெரியாத சடலம் இருந்தால், சம்பந்தப்பட்ட காவலரே முழு செலவையும் செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசு நிர்வாகத்தில் ஆம்புலன்ஸ் வாகனம், நகராட்சி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் சுடுகாடு என இருந்தும் செலவு செய்யவேண்டிய நிலை காவலர்களுக்கு ஏற்படுகிறது.
 தவிர, உயிரிழப்பவர் கிடந்த பகுதி வீட்டின் வாயிலோ, வணிக நிறுவன வாயிலாகவோ இருந்தால் அதன் உரிமையாளர் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவிக்கும் நபராக ஆகிறார். அவர் நீதிமன்றத்துக்கு செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இது தேவையற்ற அலைச்சல், மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 எஸ்.எஸ்.பி.க்கு வலியுறுத்தல்: அடையாளம் தெரியாத சடலம் எண்ணிக்கை நாளுக்கு நாள் காரைக்கால் பகுதியில் பெருகுவதால், இதனால் ஏற்படும் பிரச்னைக்கு சரியான முறையில் திட்டம் வகுத்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். முதல்வர் நிவாரண நிதியைப் போல, காவல்துறையில் இதுபோன்ற செலவினங்களை செய்ய அரசிடமிருந்து நிதி பெற்று சேமித்து வைத்திருக்கவேண்டும். அடையாளம் தெரியாத சடலதத்தை பைசல் செய்வதில் ஏற்படும் செலவினங்களில் இருந்து காவல் அதிகாரி தப்பித்து, சாதாரண காவலர் சிக்குவதால், இதன் நிலையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 புகார் பதிவு செய்ய, புகார் மீது நடவடிக்கை எடுக்க, நடவடிக்கை எடுக்காமல் இருக்க என பல நிலைகளில் காவல்துறையில் லஞ்சம் பெருகிவிட்டதாக புகார் கூறப்படுகிறது.
 இந்நிலையில், செலவினங்களுக்கு நிறுவனங்களையும், அமைப்பினரையும், கட்சியினரையும், தனி நபரையும் நாடி உதவி பெறும் நிலை காவல்துறைக்கு இருந்தால், இவர்களில் சிலர் குற்றச் செயல் புரிந்தால், குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கமுடியாத தர்ம சங்கடத்துக்கு காவல்துறையினர் ஆளாக நேரிடுகிறது.
 எனவே, அடையாளம் தெரியாத சடலப் பிரச்னையில், நேர்மையான காவலர்கள், மாத ஊதியத்திலிருந்து நிதியை செலவிட நேரிடும் நிலை ஏற்படாமலும், செலவினங்களை செய்வதற்கு அரசு நிதியை பெறும் வகையில் சிறப்பு ஏற்பாட்டினை செய்யவும், சடலத்தை மருத்துவமனைக்கும், சுடுகாட்டுக்கும் கொண்டு செல்ல அரசு ஆம்புலன்ஸ் வாகனம் பயன்படவும், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com