மாமல்லபுரம் புராதனச் சின்னங்கள்: பார்வையாளர் கட்டணம் உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை பார்வையிடுவதற்கான நுழைவுக் கட்டணத்தை தொல்லியல் துறை உயர்த்தியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
பார்வையாளர் நுழைவுக் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்புப் பலகை.
பார்வையாளர் நுழைவுக் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்புப் பலகை.


சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை பார்வையிடுவதற்கான நுழைவுக் கட்டணத்தை தொல்லியல் துறை உயர்த்தியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்து புராதனச் சிற்பங்களைப் பார்வையிடுவதற்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கட்டணம் ஏதுமின்றி சிற்பங்களை ரசிக்கும் நிலை இருந்தது. யுனெஸ்கோ அமைப்பு இங்கு ஆய்வு மேற்கொண்டு பல்லவர் கால சிற்பங்களின் கலைநயத்தையும் கலை நுணுக்கங்களையும் ஆராய்ந்து, மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலா நகரமாக அறிவித்தது. 
இதனையடுத்து வரலாற்றுச் சின்னங்களையும், சிற்பங்களையும் பாதுகாக்கும் நோக்கில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அவை கொண்டுவரப்பட்டன.
புராதனச் சின்னங்களைப் பார்வையிட உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ. 10-ஆகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு 
ரூ. 250-ஆகவும் நுழைவுக் கட்டணத்தை தொல்லியல் துறை வசூலித்து வந்தது. அதன் பின், கடந்த 2016 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாமல்லபுரம் வரும் இந்தியர்களுக்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 10 என்பது ரூ.30-ஆகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 250 என்பது ரூ. 500-ஆகவும் உயர்த்தப்பட்டது. 
இதனிடையே, பார்வையாளர் கட்டணம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், 2018 ஏப்ரல் முதல் இந்தியக் குடிமக்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 40 என்றும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ. 600 என்றும் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்தக் கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. 
இந்நிலையில், பார்வையாளர் கட்டணத்தை உயர்த்துவதாக தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகையில் கண்ணிற்கே தெரியாத வகையில் கடந்த 8ஆம் தேதி ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் உள்ளூர் பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 40 எனவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 600 எனவும் நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மாமல்லபுரத்துக்கு வியாழக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர். 
இதுகுறித்து பொதுமக்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கூறியது:
இது அடாவடியான நடவடிக்கை. ஏற்கெனவே பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது பார்வையாளர் கட்டணத்தை உயர்த்துவது சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விடும். இந்தக் கட்டண உயர்வை தொல்லியல் துறை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com