சாதாரண படுக்கை வசதிகள் ஏசியாக மாற்றம்: தெற்கு ரயில்வே எடுத்திருக்கும் அதிரடி முடிவு!

சாதாரண படுக்கை வசதிகளை ஏசி படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளாக மாற்றி வருவாயைக் கூட்ட தெற்கு ரயில்வே அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சாதாரண படுக்கை வசதிகள் ஏசியாக மாற்றம்: தெற்கு ரயில்வே எடுத்திருக்கும் அதிரடி முடிவு!


சென்னை: சாதாரண படுக்கை வசதிகளை ஏசி படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளாக மாற்றி வருவாயைக் கூட்ட தெற்கு ரயில்வே அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன் மூலம் சாதாரண படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுக்கு கொடுத்து வந்த கட்டணத்தை விட ரூ.500 முதல் ரூ.800 வரை கூடுதல் கட்டணத்தை பொதுமக்கள் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயிலில் இதுவரை இருந்த 864 படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 702 ஆகக் குறைக்கப்படுகிறது. இதுவரை 12 பெட்டிகளுடன் 864 படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுடன் இயங்கி வந்த பாண்டியன் விரைவு ரயிலில் 9 புதிய பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதே போல சென்னை எழும்பூர் - திருச்சி இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை விரைவு ரயில், சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில்களில் கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டும் பெட்டிகள் இணைப்புகளில் செய்த மாற்றங்களால் 130 முதல் 145 படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் குறைக்கப்பட்டன.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பின் வாயிலாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

ப்ரீமியம் தட்கல் டிக்கெட் என்று கூறி கொள்ளைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது படுக்கை வசதி இருக்கைகளையும் மாற்றி ஏசியாக அறிவித்தால் கூடுதலாக 500 முதல் 800 ரூபாய் வரை அதிகமாக செலவிட வேண்டியது வரும். இது ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கை என்று மதுரையைச் சேர்ந்த ரயில் பயணி கூறியுள்ளார்.

சென்னை - மதுரை இடையே 3ம் வகுப்பு ஏசி பெட்டியில் ஒரு படுக்கைக்கு ரூ.815 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாதாரண படுக்கைக் கட்டணம் ரூ.315 தான். அதிலும் ஏசி தட்கல் கட்டணம் ரூ.1,130.  சாதாரண படுக்கை வசதிக்கான தட்கல் கட்டணம் ரூ.415 மட்டுமே.

புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள எல்எச்பி ரயில் பெட்டிகளை சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை விரைவு ரயில் மற்றும் சென்னை - செங்கோட்டை இடையேயான பொதிகை விரைவு ரயில்களில் இணைக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கிய நிலையில், இந்த ரயில்களிலும் சாதாரண படுக்கை வசதி கொண்ட இரண்டு பெட்டிகளை இழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. 

தற்போது பயன்பாட்டில் உள்ள  ஐசிஎஃப் தயாரித்த 12 ரயில் பெட்டிகளில் 864 சாதாரண படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் உள்ளன. இதுவே 10 புதிய எல்எச்பி பெட்டிகள் பொருத்தப்பட்டால் படுக்கை வசதி 780 ஆகக் குறைந்து விடும். (ஒரு பெட்டிக்கு 78 படுக்கை வசதிகள்)

அதாவது போக்குவரத்துச் சேவையில் அதிகப்படியான பயணிகள் ரயில் போக்குவரத்தை நம்பியே இருப்பதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ரயில்வே இதுபோன்ற மோசமான முடிவுகளை எடுப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த நடவடிக்கையால் தெற்கு பகுதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 500 சாதாரண படுக்கை வசதி கொண்ட இருக்கைகளை இழக்க வேண்டியது இருக்கும். இதனால் ஏற்கனவே நெரிசலோடு இயக்கப்படும் ரயில்களின் தேவை அதிகரிக்கும் என்று அச்சம் கொள்கிறார்கள் பயணிகள்.

இது பற்றி ரயில்வே அதிகாரி கூறுகையில், தற்போது இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் நீக்கப்பட்டு 3ம் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைப்பது என்பது ரயில்வே நிர்வாகம் எடுத்த முடிவு. இது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com