வனத் துறை கால்நடை மருத்துவரின்றி தவிக்கும் முதுமலை புலிகள் காப்பகம்

சுமார் 400 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள், தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள், சிறுத்தை
வனத் துறை கால்நடை மருத்துவரின்றி தவிக்கும் முதுமலை புலிகள் காப்பகம்

உதகை: சுமார் 400 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள், தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள், சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டெருமை, கரடி, கடமான், புள்ளி மான் என பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.

இவை ஒருபுறமிருக்க, கூடலூர் பகுதியில் சாலைகளில் நடமாடும் யானைகள், மசினகுடியில் சாலையில் நடமாடும் கரடிகள், தூனேரி கிராமத்தில் மனிதர்களைத் தாக்கும் சிறுத்தை, பி.மணியட்டி பகுதியில் மறைந்திருந்து போக்கு காட்டும் புலி, மஞ்சூர் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் வலம் வரும் காட்டெருமைகள், அளக்கரை பகுதியில் தேயிலைத் தோட்டப் பாறைகள் மீது படுத்து பொதுமக்களின் கண்களில் தென்படும் கருஞ்சிறுத்தைகள் போன்றவற்றால்மனிதர்களுக்கு ஏற்படும் அபாயங்களும் அதிக அளவில் உள்ளன.

மொத்த பரப்பளவில் சுமார் 53 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. குறிப்பாக புலி, யானை, காட்டெருமை போன்றவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வனத்துக்குள் வன விலங்குகளுக்கிடையேயும், வனத்துக்கு வெளியே வன விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயும் ஏற்படும் மோதல்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் நீலகிரி மாவட்டத்தில் வனத் துறையின் சார்பில் கால்நடை மருத்துவர் ஒருவர் கூட இல்லாதது பெரும் 
அவலமாகும்.

கடந்த 8 மாதங்களாக முதுமலை புலிகள் காப்பகத்தில் மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திலேயே வனத் துறையின் சார்பில் கால்நடை மருத்துவர் யாரும் இல்லாததால், அருகில் உள்ள கிராமங்களில் கால்நடை மருத்துவர்களாகப் பணியாற்றுவோரைக் கொண்டு நிலைமை சமாளிக்கப்பட்டு வந்தது. இதில் பெரிய பிரச்னை என்னவென்றால், வளர்ப்புக் கால்நடைகள் தொடர்பாகவே பயிற்சி பெற்று, பணியாற்றி வரும் இத்தகைய கால்நடை மருத்துவர்களால் வன விலங்குகள் குறித்தோ அல்லது அவற்றின் குண நலன்கள் குறித்தோ தெரிந்து கொள்ளாமல் அவற்றுக்கு சிகிச்சையளிக்க முற்படுவது இயலாததாகவே உள்ளது. 

இந்நிலையில், கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர் பொறுப்பில் உள்ள டாக்டர் மனோகரன் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வனத் துறை கால்நடை மருத்துவராகக் கூடுதல் பொறுப்பில் 
நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக வன உயிர் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை அறங்காவலர் சாதிக் அலி கூறுகையில், "இத்தகைய போக்கு ஏற்றதல்ல. இப்பிரச்னையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு வன விலங்குகள் தொடர்பாக அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவரை நீலகிரி மாவட்டத்துக்கும், முதுமலை புலிகள் காப்பகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும்' என்றார். 

பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை, வனத் துறையில் பணியாற்றுவதற்கு கால்நடை மருத்துவர்கள் பலர் முன்வந்தனர். அப்போது வனத் துறையில் வேலைப்பளு குறைவாக இருந்தது. ஆனால், தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது; வன விலங்குகளுக்கு ஏற்படும் பிரச்னைகளால் அவற்றுக்கு சிகிச்சை அளிப்பது, உயிரிழக்கும் வன விலங்குகளுக்குப் பிரேதப் பரிசோதனை செய்தல், மனித - விலங்கு மோதலால் நகரப் பகுதிக்குள் வரும் வன விலங்குகளை மீட்டெடுத்தல் போன்ற பணிகள் தொடர்ச்சியாக உள்ளன. வனத் துறையில் இருப்பதைவிட, 

கால்நடைப் பராமரிப்புத் துறையில்தான் ஆதாயம் அதிகம் என்பதால் வனத் துறைக்கு வருவதற்கு தயக்கம் காட்டப்படுவதாக ஓய்வுபெற்ற வனத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் இருக்கின்றன. அவற்றுக்குத் தேவையான சிகிச்சை அளிப்பதற்கு வனத் துறையில் நிரந்தர கால்நடை மருத்துவர் இல்லாத சூழல் இருந்தது. இந்த நிலையில், கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட யானைகளுக்கு முதுமலையில் கும்கி யானைக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த யானைகளுடன் வந்த கேரள மாநில கால்நடை மருத்துவர்கûளைக் கொண்டு தெப்பக்காடு யானைகள் முகாமில் இருக்கும் யானைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் உலகநாதன் கூறுகையில், "வனத் துறைக்கென தனியாக கால்நடை மருத்துவர்கள் இல்லாத சூழலில், கால்நடை பராமரிப்புத் துறையில் இருந்து வனத் துறைக்கு கூடுதல் கால்நடை மருத்துவர்களை அனுப்பி வைத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்' என்றார்.

எனவே, முதுமலை புலிகள் காப்பகத்துக்கும், நீலகிரி மாவட்டத்துக்கும் கூடுதல் எண்ணிக்கையில் நிரந்தர கால்நடை மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாகும்.

- ஏ. பேட்ரிக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com