அடிப்படை வசதியின்றி ரயில்வே கேட் கீப்பர்கள் அவதி!

அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள நிலையிலும், ரயில்வே கேட் கீப்பர்கள், கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி சிரமமான சூழலில் பணியாற்றி வருகின்றனர்.
அடிப்படை வசதியின்றி ரயில்வே கேட் கீப்பர்கள் அவதி!


திருச்சி: அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள நிலையிலும், ரயில்வே கேட் கீப்பர்கள், கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி சிரமமான சூழலில் பணியாற்றி வருகின்றனர்.

லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டுள்ள ரயில்வே துறையில், அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பலர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தண்டவாளங்கள் பராமரிப்பு மற்றும் ரயில்வே கேட்டுகள் பராமரிப்பு பணிகளை நிர்வகிக்கும் பொறியியல் துறையில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த வகையில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 

தெற்கு ரயில்வே கீழ் வரும் தமிழகத்தில் மொத்தம் (ஆள் உள்ள) ரயில்வே கேட்டுகள் 2,232 உள்ளன. இதில் கேட் கீப்பர்களாக சுமார் 5000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 800 பேர் பெண்கள். திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 258 கேட்டுகளில் சுமார் 30 பெண்கள் உள்ளிட்ட 500-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இது தவிர, ஏராளமான ரயில்வே கேட்டுகளில் பணியாளர்களின்றி காலியாக உள்ளன. ரயில்வே கேட்டுகள் நகரம், கிராமப்புற பகுதிகள் மட்டுமன்றி, ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகள், வனப்பகுதிகளை ஒட்டிய இடங்கள், நெடுஞ்சாலைகள், விளை நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான ரயில்வே கேட்டுகள் அமைந்துள்ளன. இவற்றில் எந்தவிதமான பாதுகாப்பு வசிதியும் இன்றி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், தண்ணீர், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றியும் தொழிலாளர்கள் குறிப்பாக, பெண் தொழிலாளர்கள், ஏராளமான சிரமங்களை அனுபவித்தபடி பணியாற்றி வருகின்றனர். தங்களது குறைகளைத் தீர்க்கும்படி பல முறை கோரிக்கை விடுத்தும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வருகின்றன. 

திருச்சி ரயில்வே கோட்டத்தைச் சேர்ந்த பெண் கேட் கீப்பர்கள் சிலர் கூறுகையில், 
மிகவும் ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்டுகளில் பணிக்கு வந்து சேர்வதே மிகவும் சிரமம். அத்துடன் கழிவறையோ, தண்ணீர் வசதியோ கிடையாது. குடிநீரை நாமே கொண்டு வர வேண்டிய சூழலிலும், இயற்கை உபாதைகளுக்கு பாதுகாப்பற்ற வகையில் திறந்தவெளிகளிலும் அல்லது அக்கம் பக்கத்திலிருக்கும் வீடுகளையோ நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் என்ற கருணை அடிப்படையில் சிலர் ஆதரவு அளிக்கின்றனர். தினசரி தேவை என்பதால் சிலர் உதவ முன் வருவதில்லை. திருச்சி சாத்தனூர் மற்றும் குமாரமங்கலம் இடையேயுள்ள ரயில்வே கேட்டில் பணியாற்றிய கேரளத்து பெண் ஒருவர் இயற்கை உபாதைக்கு சென்றபோது, சிலரால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவமும் நடந்துள்ளது என்றனர்.

தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயீஸ் தொழிற்சங்க துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறியது: தெற்கு ரயில்வேயில் ஏராளமான கேட்டுகளில் பணியாற்றுவோருக்கு, தங்கும் ஷெட்டுகள் பாதுகாப்பாக இல்லை. சில இடங்களில் தகரத்தால் ஆன ஷெட்டுகளே உள்ளன. மின் வசதி, கழிவறைகள் இல்லை. கழிவறை இருந்தாலும் தண்ணீர் இருக்காது. சுற்றுப்புறம் புதர்களாலும், விஷ ஜந்துக்கள் அதிக அளவில் புழங்கும் இடமாகவும் இருப்பதால், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மிகவும் சிரமமான சூழலில் பணியாற்றி வருகின்றனர். நகரங்களில் உள்ள ரயில்வே துறை அலுவலகங்களில் குளிர்சாதன வசதிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு கடைநிலை ஊழியர்களின் சிரமம் தெரிவதில்லை என்றார்.

திருச்சி யில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டியிடம் இது குறித்து கேட்டபோது, கழிவறை வசதிகள் மற்றும் தண்ணீர் வசதிகள் செய்து தர ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. முதல் கட்டமாக, கட்டட வசதியுள்ள ரயில்வே கேட் கீப்பர் ஷெட்டுகளில் மேல் நிலை நீர் தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நிரப்பும் தண்ணீருக்கும் பில் கொடுத்து தொகை பெற்றுக் கொள்ளலாம். கழிவறையற்ற இடங்களில் கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கழிவறை இருந்தும் தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளவற்றுக்கு மேல் நிலை நீர்தொட்டி அமைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com