முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்: தமிழகத்தின் உரிமை மீண்டும் உறுதிப்படுத்தப்படுமா

முல்லைப் பெரியாறு அணை மீதான தமிழகத்தின் உரிமையை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ள அணையின் நீர்மட்டத்தை இந்த ஆண்டும் 142 அடிக்கு உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்: தமிழகத்தின் உரிமை மீண்டும் உறுதிப்படுத்தப்படுமா

மதுரை: முல்லைப் பெரியாறு அணை மீதான தமிழகத்தின் உரிமையை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ள அணையின் நீர்மட்டத்தை இந்த ஆண்டும் 142 அடிக்கு உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கேரள வனத்தில் உள்ள இந்த அணை கடந்த 1895-இல் கட்டி முடிக்கப்பட்டது. தமிழகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த அணை பலம் இழந்து விட்டதாகவும், அணை உடைந்தால் கேரளத்தின் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் கடந்த 1979-இல் மலையாள மொழி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. இதுதான் சாக்கு எனக் கருதிய கேரள அரசு அணையில் தேங்கும் நீரின் உயரத்தை 152 அடியிலிருந்து 136 அடிக்கு குறைத்தது. அணையை வலுப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை மீண்டும் 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என தமிழகமும், கேரளமும் முடிவு செய்தன. அணையை தமிழக அரசு பலப்படுத்திய பிறகு நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்த கேரள அரசு ஒப்புக் கொள்ளாததால் சிக்கல் உருவானது.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2006-இல் தீர்ப்பளித்தது. அதை கேரள அரசு நிராகரிக்கும் வகையில் சட்டம் ஒன்றை இயற்றியது. அதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடிக்கும், அணையை மேலும் பலப்படுத்தி 152 அடிக்கும் நீரைத் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2014 மே மாதம் இறுதி தீர்ப்பளித்தது. தீர்ப்பை தொடர்ந்து அதே ஆண்டில் நவம்பர் மாதம் தென் மேற்குப் பருவ மழையால் 35 ஆண்டுகளுக்கு பிறகு அணையில் 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டிலும் 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது. பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை குறைவால் அணையில் அந்த அளவுக்கு தண்ணீரை தேக்க முடியவில்லை.

இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை கேரளத்தில் கடந்த ஜூன் 8 ஆம் தேதி முதல் பெய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த 3 ஆம் தேதி 135.95 அடி வரை உயர்ந்தது. எனவே, இந்த ஆண்டு மீண்டும் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதனிடையே, கடந்த ஜூலை 18 ஆம் தேதி அணையை ஆய்வு செய்த மத்திய துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், தென் மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என துணைக் குழுவிடம் கேரள பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்ட அனுமதித்தால் அதன் பிறகான உபரி நீரால் கேரளத்தின் பெரியாற்று கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதே காரணம். அதற்கு, அணையில் 142 அடி வரையில் தண்ணீரை தேக்க தமிழகத்துக்கு உரிமை உள்ளது என்று கூறி தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்த வேண்டும் என முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளும் துணைக் குழுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். எனினும், அதன் பிறகு மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் 133.60 அடியாக குறைந்தது.

இந்நிலையில், கேரளத்தில் இப்போது மீண்டும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. பருவ மழை தொடர்வதற்கான அறிகுறி இருப்பதால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள கேரளத்தவர்களின் ஆக்கிரமிப்பு சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதாலும், அணை பராமரிப்புக்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடையூறு இல்லாமல் சென்றுவர ஏதுவாகவும் கேரள அதிகாரிகளின் அழுத்தத்துக்கு இணங்கி வைகை அணைக்கு கூடுதலாக தண்ணீரை திறந்துவிட்டு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டச் செய்யாமல் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் விட்டுவிடக் கூடாது என்பதே தமிழக விவசாயிகளின் வேண்டுகோள். காரணம், இப்போது அணையிலிருந்து திடீரென கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுவதாக விவசாயிகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அணையில் தொடர்ந்து 142 அடிக்கு தண்ணீரை தேக்காமல் விட்டுவிட்டால் கேரளம் மீண்டும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் உயிர்நாடியாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணை கட்டியதன் பிரதான நோக்கம் வறண்ட பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பயன் பெற வேண்டும் என்பதே. அதற்கு, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, கேரளத்துடன் எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை மீண்டும் ஒரு முறை 142 அடிக்கு உயர்த்தி தமிழகத்தின் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com