மெரீனா நினைவிட வழக்கு தள்ளுபடிக்கு எதிராக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு 

சென்னை மெரீனா கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைப்பதை எதிர்த்து தான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு.. 
மெரீனா நினைவிட வழக்கு தள்ளுபடிக்கு எதிராக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு 

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைப்பதை எதிர்த்து தான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார்.

உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் முதல்வரும் திமுக. தலைவருமான மு.கருணாநிதி  கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, கருணாநிதியின்  உடலை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி வளாகத்தில் புதைக்க அனுமதி வழங்கும்படி தமிழக அரசிடம் கருணாநிதி குடும்பத்தினர் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்கவில்லை.

பின்னர் இது தொடர்பாக திமுக சார்பாக உயர் நீதிமன்றத்தில் அன்று இரவே வழக்கு தொடரப்பட்டது. அப்பொழுது ஏற்கனவே மெரீனா கடற்கரையில் உள்ள தலைவர்களின் சமாதிகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சட்டச்சிக்கல் ஏற்படும் என்று கூறி, மெரீனா கடற்கரையில் இடம் வழங்க முடியாது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஐந்து வழக்குகளும் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுசமயம் இந்த வழக்குக்களில் ஒன்றைத் தொடுத்தவரான சமூக ஆர்வலரான ட்ராபிக் ராமசாமி, அப்பொழுது உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் உச்ச நீதிமன்றம்  அதனை விசாரிக்க இயலாது என்று கூறி விட்டது 

அதேசமயம் மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கு  எதிராகத் தான் தொடர்ந்த வழக்கினை வாபஸ் பெறவில்லை எனத் தெரிவித்திருந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தனி வழக்குத் தொடர இருப்பதாகவும் அண்மையில் பேட்டி அளித்து இருந்தார்.

இந்நிலையில் தான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார்.

தலைமை நீதிபதியிடம் அவர் தனது முறையீட்டில், தனது கருத்தை கேட்காமல் தவறாக புரிந்து கொண்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து கோரிக்கை தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளரை அணுகுமாறு, டிராபிக் ராமசாமிக்கு  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com