யானை வழித்தட ஆக்கிரமிப்பு விவகாரம்: 24 விடுதிகளுக்கு "சீல்' வைப்பு: 12 ரிசார்ட் மீது இன்று நடவடிக்கை

சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் யானை வழித்தட நிலங்களிலுள்ள கட்டடங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமை முதல்கட்டமாக 24 ரிசார்ட் வளாகங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டது.
பொக்காபுரம் பகுதியில் அனுமதியற்ற கட்டடத்துக்கு 'சீல்' வைக்கும்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட உரிமையாளர்.
பொக்காபுரம் பகுதியில் அனுமதியற்ற கட்டடத்துக்கு 'சீல்' வைக்கும்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட உரிமையாளர்.

சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் யானை வழித்தட நிலங்களிலுள்ள கட்டடங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமை முதல்கட்டமாக 24 ரிசார்ட் வளாகங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டது. பரிசீலனையில் உள்ள 12 ரிசார்ட் வளாகங்கள் மீது திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. 
நீலகிரி மாவட்டத்தில் சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் யானை வழித்தட நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலப் பகுதியில் குடியிருப்புகளுக்கான அனுமதியை பெற்று வர்த்தக ரீதியிலான ரிசார்ட்டுகள் நடத்தப்படுவதாக வழக்குரைஞர் ராஜேந்திரன் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் அத்தகைய கட்டடங்கள் தொடர்பான முழு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த முதல்கட்ட அறிக்கையில், யானை வழித்தட நிலங்களாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதியில் 809 கட்டடங்கள் இருப்பதாகவும், இதில் வணிக நோக்கில் 39 ரிசார்ட் வளாகங்கள் செயல்பட்டு வருவதாகவும் , இவற்றில் 309 கட்டடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 
இதையடுத்து அந்தக் கட்டடங்களுக்கு "சீல்' வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், 27 ரிசார்ட் வளாகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை "சீல்' வைப்பதாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக மூன்று சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்குழுக்களில் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், உதகை கோட்டாசியர் சுரேஷ், வட்டாட்சியர் தினேஷ்குமார், சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோருடன் வருவாய்த் துறை அலுவலர்களும், ஊராட்சி அலுவலர்களும், காவல் துறையினரும் இடம் பெற்றிருந்தனர். 
இவர்களில் சோலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 15 ரிசார்ட் வளாகங்களும், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் 10 ரிசார்ட் வளாகங்களும், உதகை வட்டாட்சியரின் கட்டுப்பாட்டில் 2 ரிசார்ட் வளாகங்களும் இடம் பெற்றிருந்தன. 
இவற்றில் சோலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியிலிருந்த 15 ரிசார்ட் வளாகங்களுக்கும், உதகை வட்டாட்சியரின் கட்டுப்பாட்டிலிருந்த 2 ரிசார்ட் வளாகங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை "சீல்' வைக்கப்பட்டு விட்டது.
கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் கட்டுப்பாட்டிலிருந்த 10 ரிசார்ட் வளாகங்களில் 7 வளாகங்களுக்கு மட்டுமே மாலை வரை "சீல்' வைக்கப்பட்டது. மற்ற 3 ரிசார்ட் வளாகங்களும் வனத்தின் உள்பகுதிக்குள் அமைந்துள்ளதாலும், அங்கு யானைகளின் நடமாட்டம் இருந்ததாலும் அந்த 3 வளாகங்களுக்கும் திங்கள்கிழமை காலை "சீல்'வைக்கப்படுமென கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம் தெரிவித்தார்.
இதனிடையே ஆட்சியரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த மேலும் 12 ரிசார்ட் வளாகங்களுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதாக அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், அவர்களிடமிருந்த ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. 
இவர்களுக்கு திங்கள்கிழமை நோட்டீஸ் கொடுப்பதா அல்லது அந்த ரிசார்ட் வளாகங்களுக்கு நேரடியாக "சீல்' வைப்பதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து திங்கள்கிழமை காலையில் முடிவெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பந்த் அறிவிப்பு

பொக்காபுரம் பகுதியில் ஹூக் டேவிட் டைமன், டேவிட் பிலிப் ஆகியோரின் ரிசார்ட்டுகளுக்கு "சீல்' வைக்க அதிகாரிகள் சென்றபோது, தங்கள் கட்டடம் உரிய அனுமதியோடு செயல்பட்டு வருவதாகக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையினர் ரிசார்ட் உரிமையாளர்களை எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர்கள் "சீல்' வைக்க அனுமதித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
ரிசார்ட்டுகளைத் தொடர்ந்து 821 குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால், திங்கள்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு பொக்காபுரம் பகுதியில் இயங்கும் வாகனங்கள் நிறுத்தப்படும்; வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com