அழகிரியை சமாளிப்பாரா ஸ்டாலின்?

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர்.
அழகிரியை சமாளிப்பாரா ஸ்டாலின்?

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார். 
ஸ்டாலின் கலக்கம்? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் ஆதங்கத்தை மூன்று நாள்களில் தெரிவிப்பேன்' என்று அழகிரி கூறியுள்ளார். இதனால், கருணாநிதி இல்லாத மு.க.ஸ்டாலினை முதன்மையாகக் கொண்ட திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
தென்மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பை வகித்தவர் மு.க.அழகிரி. அந்த மாவட்டங்களைப் பொருத்தவரை அழகிரி எடுப்பதே முடிவு எனும் அளவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இருக்கும்போது அவருக்கு திமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், திமுகவின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிய போது, படிப்படியாகக் கட்சியிலிருந்து அழகிரி ஓரங்கட்டப்பட்டார்.
இறுதியாக 2014 மார்ச் 24-இல் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இது எல்லாம் கருணாநிதி நினைவுடன் இருந்த நிலையில் எடுத்த முடிவாகும். அதன் பிறகு, அழகிரியுடன் கட்சியினர் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. கோபாலபுரம் இல்லத்துக்கு மட்டும் அழகிரி வந்து செல்லக்கூடியவராக இருந்தார். அதுவும் பல நேரங்களில் கருணாநிதியைச் சந்திக்காமலே சென்று வரக்கூடியவராக இருந்தார்.
ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை இன்றி...மு.க.ஸ்டாலினிடமும் அவருக்கு எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்து வந்தது. ஸ்டாலின் தலைவராக இருக்கும் வரை திமுக தேர்தலில் வெற்றி பெறாது என்று அழகிரி கூறி வந்தார். ஆனால், கருணாநிதி உடல்நிலை கடந்த ஜூலை 28-ஆம் தேதி மிகவும் மோசமாகி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அழகிரி உடன் இருந்து கவனித்து வந்தார்.
பிணக்கு அதிகரிப்பு: ஒரு கட்டத்தில் ஸ்டாலினும், அழகிரியும் பேசிக் கொண்டதுடன் இருவரும் இணைந்து செயல்பட்டனர். மெரீனாவில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டது வரை இந்த இணைப்பு தொடர்ந்தது. தற்போது இருவருக்கும் இடையே மீண்டும் பெரிய பிணக்கு ஏற்பட்டுள்ளது.
அழகிரியின் எதிர்பார்ப்பு என்ன? திமுகவில் தற்போது தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகள் காலியாக உள்ளன. இதில் தலைவர் பதவியை ஸ்டாலின் வைத்துக் கொள்வதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அழகிரியும்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அடுத்து பொருளாளர் பதவியும் தற்போது ஸ்டாலின் வசமே உள்ளது. மேலும், திமுகவில் 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் கட்சியில் தனக்கு என்ன பதவியை அழகிரி எதிர்பார்க்கிறார் என்பதை அவர் இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
பேச்சுவார்த்தை தோல்வி: கருணாநிதியின் குடும்பத்தில் தற்போது மூத்தவராக முரசொலி செல்வமே இருந்து வருகிறார். அவர்தான் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவில் எந்தவித பிளவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் - அழகிரி இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். அழகிரியைக் கட்சியில் சேர்க்கலாம், ஆனால் மாநிலப் பொறுப்புக் கொடுக்க வேண்டாம் என்பதில் ஸ்டாலின் பிடிவாதமாக இருக்கிறார்.
கனிமொழிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு இளைஞர் அணித் தலைவர் பதவியும் அளித்து குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படுத்த சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் கட்சிப் பொறுப்பில் அமர்த்தினால் திமுகவுக்கு ஏற்கெனவே இருக்கும் குடும்பக் கட்சி' என்கிற அவப்பெயர் அதிகரிக்கும் என்று கருதுகிறார் மு.க. ஸ்டாலின்.
இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்ப்பு: அழகிரிக்கு, ஸ்டாலினையும்விட இரண்டாம் கட்டத் தலைவர்களே பெரும் எதிர்ப்பாளர்களாக இருந்து வருகின்றனர். கருணாநிதி, முரசொலி மாறன், வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பிறகு அடுத்தகட்ட திமுக நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகப் பேசக்கூடியவராக அழகிரியே இருந்து வருகிறார். இதனால் அவரை அணுகுவதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் பயப்படுகின்றனர்.
காவேரி மருத்துவமனையில் அழகிரி இருந்த நேரங்களில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெரும்பாலானோர் மருத்துவமனையில் இருந்து தொலைவிலேயே நின்றிருந்தனர். அதனால், கட்சிக்குள் அழகிரி கொண்டு வரப்பட்டால், தங்களால் முன்புபோல இருக்க முடியாதோ என்ற அச்சம் ஏற்பட்டு, அழகிரியைச் சேர்ப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


ஸ்டாலின் தயக்கம்: மாநிலப் பொறுப்பு அழகிரிக்கு கொடுக்கப்பட்டால், திமுக நிர்வாகிகள் அனைவரும் அவர் பக்கம் சென்று, தன்னுடைய தலைமைக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற சந்தேகம் ஸ்டாலினுக்கு இருந்து வருகிறது. இதனால், அழகிரியை கட்சியில் சேர்ப்பதில் அவர் தயக்கம் காட்டுகிறார். இதனால் அழகிரியைக் கட்சியில் சேர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்திய குடும்பத்தினரிடம் ஸ்டாலின் தன் முடிவை உறுதிபடத் தெரிவித்து விட்டதாகத் தெரிகிறது.
திமுகவில் அழகிரிக்கு செல்வாக்கு இல்லை. அவர் எதிர்த்து எப்படிச் செயல்பட்டாலும் பார்த்துக் கொள்ளலாம். அதனால், சேர்க்க வேண்டாம் என்று ஸ்டாலின் கருதுவதாகத் தெரிகிறது.
தர்ம யுத்தம் தொடக்கம்: அதைத் தொடர்ந்தே கருணாநிதியின் நினைவிடத்தில் அழகிரி தனது தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். ஏற்கெனவே, கருணாநிதி இருக்கும்போது 6 மாதத்தில் என் அரசியல் முடிவைத் தெரிவிப்பேன் என்று அழகிரி கூறியிருந்தார். அது, ரஜினியின் அரசியலை முன்வைத்தே அழகிரி கூறியதாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அழகிரி அளித்த பேட்டி ஒன்றில், திமுகவில் உள்ள பலர் ரஜினியின் பக்கம் கவனம் செலுத்தி வருவதாக கூறியிருந்தார். அது, அழகிரியின் மன நிலையையே பிரதிபலிப்பதாக திமுகவினர் கூறுகின்றனர்.
பின்னணியில் பாஜக? ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்த வந்து, அழகிரியைக் கூப்பிட்டு ஆறுதல் கூறினார். முதுகு வலியின் காரணமாக கருணாநிதியின் உடல் அருகே அழகிரி நிற்காமல் ஒதுங்கி ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஸ்டாலின், கனிமொழி மட்டுமே கருணாநிதியின் உடல் அருகே நின்றிருந்தனர். அவர்களிடம் நலம் விசாரித்த மோடி, அழகிரியைத் தேடி நலம் விசாரித்தது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
மேலும், அஞ்சலி செலுத்த வந்த பாஜக தமிழக மேலிடப் பிரதிநிதி முரளிதர ராவும் அழகிரியுடன் அரை மணி நேரத்துக்கும் மேல் உட்கார்ந்து அரசியல் பேசியுள்ளார். இதனால், அழகிரிக்குப் பதவியே கொடுத்தாலும், ரஜினி மற்றும் பாஜகவுடன் இணைந்து கட்சியில் பிரச்னை எழுப்புவார் என்பதால் அழகிரியை எந்த வகையிலும் சேர்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்திருப்பதாகத் தெரிகிறது.
அழகிரியின் பலம்: மு.க.அழகிரியிடம் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லை. அதே சமயம், தென்மாவட்டங்களில் அவருக்கு என்று குறிப்பிட்ட செல்வாக்கு இருக்கிறது. மேலும், கருணாநிதியின் மகன் என்ற கூடுதல் பலம் இருக்கிறது. இது, திமுகவுக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூற முடியாவிட்டாலும், பாஜக, ரஜினியோடு இணைந்து அவர் எதிர்க்கும்போது, அது திமுகவுக்குச் சரிவை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.
கட்சியில் பிளவு ஏற்படும்போது பதவியில் இல்லாத இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்ப்பு அணியில் இணைந்து கொள்வது வழக்கம். எம்.ஜி.ஆர். பிரிந்தபோதும், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்ட போதும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தனியாக இயங்க முற்பட்ட போதும் நடந்தது போலவே திமுக பிளவுபட்டாலும் ஸ்டாலின் தலைமையில் முக்கியத்துவம் பெறாதவர்கள் அழகிரி பின்னால் அணிதிரளக் கூடும். அதற்கு பாஜகவின் மறைமுக ஆதரவு இருக்குமானால் கட்சி இரண்டாகப் பிளவுபட வாய்ப்புள்ளது.
ஸ்டாலினின் திறன்: அப்படி ஒரு சூழல் வரும்போது, அதை மு.க.ஸ்டாலினால் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. எம்ஜிஆர், வைகோ ஆகியோரால் திமுகவில் இரு முறை பிளவு ஏற்பட்டது. இரண்டையும் சமாளித்து கட்சியை நிலை நிறுத்தியவர் கருணாநிதி. அப்படியொரு பிளவு திமுகவில் இப்போது ஏற்பட்டால், அதை ஸ்டாலின் சமாளித்துவிடுவார் என்று சுலபமாகச் சொல்லிவிட முடியாது.
இதுவரை மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 சட்டப்பேரவைத் தேர்தல்கள், ஒரு நாடாளுமன்றத் தேர்தலை திமுக சந்தித்துள்ளது. இதில் எதிலுமே வெற்றியின் பக்கம் திமுகவை ஸ்டாலின் அழைத்துச் செல்லவில்லை என்பது அழகிரியின் குற்றச்சாட்டு. அதேபோல ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வைப்புத் தொகை இழந்ததற்கும் அழகிரி ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி வருகிறார். திமுகவினர் மத்தியிலும் இந்த அதிருப்தி காணப்படுகிறது.
முன்பு கருணாநிதி என்ற பெரும்பலம் இருந்தது. இப்போது திமுகவிடம் அந்தப் பலம் இல்லை என்பதை ஸ்டாலின் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர்.
கடைசி உரை: கருணாநிதி பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி 2016-இல் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா. அதில், உடன்பிறப்புகள் சிலர் பேசும்போது, அடுத்த முறை நாங்கள் வெற்றி பெற்றுக் காட்டுவோம். எங்களுடைய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற குழப்பங்களுக்கு விடை கொடுத்து, கட்சியை வலிமைப்படுத்துவோம்' என்று கூறினர். அப்படிச் செய்யும் தளபதிகளால்தான் திமுகவை வளர்க்க முடியும்' என்று கருணாநிதி கூறினார். தளபதி என்று குறிப்பிட்டு அப்போது கருணாநிதி கூறியது ஸ்டாலினைத்தான் என்பதை அனைவரும் அறிவர். 
அழகிரியின் பிரச்னையை ஸ்டாலின் எப்படி அணுகப்போகிறார் என்பதில்தான் திமுகவின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com