விருந்தாளி என்று அழகிரியை விமர்சித்த வீரமணிக்கு துரை தயாநிதியின் பதிலடி 

காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும்  கி.வீரமணி அவர்கள் என் தந்தை அழகிரி பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று துரை தயாநிதி விமர்சித்துள்ளார்.
விருந்தாளி என்று அழகிரியை விமர்சித்த வீரமணிக்கு துரை தயாநிதியின் பதிலடி 

சென்னை: காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும்  கி.வீரமணி அவர்கள் என் தந்தை அழகிரி பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று துரை தயாநிதி விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது நினைவிடம் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி வளாகத்தில் அமைக்கப்பட்டது. கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி திங்களன்று தனது குடும்பத்துடன், கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, எனது தந்தையிடம்  எனக்குள்ள ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது தற்போது உங்களுக்குத் தெரியாது. கலைஞர் அவர்களுடைய உண்மையான விசுவாசமுள்ள அனைத்து திமுக தொண்டர்களும் என் பின்னால்தான் உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் என்னையே ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதற்குக் காலம் பின்னால் பதில் சொல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அப்போது, ஆதங்கம் சொந்த விஷயமா? கட்சி தொடர்பானதா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, கட்சி தொடர்பானதுதான் என்று அழகிரி பதில் அளித்தார். திமுக செயற்குழுக் கூட்டம் தொடர்பான கேள்விக்கு, நான் தற்போது கட்சியில் இல்லை. எனவே, திமுக செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து கோபாலபுரம் சென்ற அழகிரியிடம் செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். அப்போது கட்சியில் பிளவு தொடங்கிவிட்டதா என்ற கேள்விக்கு நான் கட்சியில் இல்லை என்றார். மேலும் கட்சி ரீதியான ஆதங்கம் என்ன என கேட்டதற்கு பொறுங்கள் இப்போது சொல்ல முடியாது, நான் 2 அல்லது 3 நாட்களில் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

பின்னர் நேற்று ஆங்கிலத் தொலைக்கட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பொழுது அவர், "திமுகவின் கட்சிப் பதவிகள் விற்கப்படுகின்றன. மேலும் பெரும்பாலான திமுக தலைவர்கள் ரஜினிகாந்த் உடன் தொடர்பில் உள்ளனர். திமுகவில் தற்போது பொறுப்பில் உள்ள தலைவர்கள் திமுகவை அழித்து விடுவர். திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும். திமுகவுக்கு நான் திரும்புவதை ஸ்டாலின் விரும்பவில்லை. அதோடு  நான் கட்சிக்குள் வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என்று மற்றவர்கள் அச்சப்படுகிறார்கள்" என்றும் அழகிரி தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்துகளுக்கு திமுகவின் உள்ளேயும், வெளியேயும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. குறிப்பாக இதுகுறித்து திராவிடர் கழகத்தின் தலைவரான கி.வீரமணியிடம் செவ்வாய் காலை கேட்கப்பட்ட பொழுது, "வீட்டில் இருப்பவர்கள் பற்றிக் கேளுங்கள்; வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றிக் கேட்க வேண்டாம்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும்  கி.வீரமணி அவர்கள் என் தந்தை அழகிரி பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று துரை தயாநிதி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும்  ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து மீண்டும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com