சட்ட அறிவாற்றல் மிகுந்த வழக்குரைஞர் தேவை அதிகரித்து வருகிறது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா

சட்ட அறிவாற்றல் மிகுந்த வழக்குரைஞர்களின் தேவை அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா கூறினார்.


சட்ட அறிவாற்றல் மிகுந்த வழக்குரைஞர்களின் தேவை அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா கூறினார்.
வண்டலூர் கிரசென்ட் சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க நாள் விழாவில் அவர் பேசியது:
வழக்குரைஞர் தொழில் மருத்துவர் தொழிலுக்கு அடுத்தபடியாக மிகவும் புனிதமான தொழில். இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டு பின்னர் தலைவர்களாக உயர்ந்தவர்கள். ஆங்கிலேயர்கள் இழைத்த அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்து, நாட்டின் விடுதலைக்காகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்கள். 
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, பிரச்னைகளும் அதிகரித்து, நீதிமன்றங்களில் வழக்குகளும் குவிந்தவண்ணம் உள்ளன. 
இதனால் தகுதியும், திறமையும், சட்ட அறிவாற்றலும் மிகுந்த வழக்குரைஞர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பையும், தீர்வையும் பெற்றுத் தரும் பொறுப்பை வழக்குரைஞர்களிடம் நம்பி ஒப்படைக்கின்றனர். மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக வழக்குரைஞர்கள் திகழ வேண்டும். 
அநீதி காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு சட்டரீதியாக உதவி, நீதிக்குப் பெருமை சேர்க்கும் பிரதிநிதிகளாக வழக்குரைஞர்கள் திகழ வேண்டும். வழக்குரைஞர்கள் தொழிலுக்கு வயது வரம்பே இல்லை. 
வாழ்நாள் முழுக்க பணிபுரியலாம். கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம் எங்களைப் போன்று வழக்குரைஞராக, நீதிபதிகளாக நீங்களும் வாழ்வில் உயர முடியும் என்றார் எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா.
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாட்சா, மூத்த வழக்குரைஞர்கள் லட்சுமண ரெட்டியார், வெங்கடபெருமாள், பதிவாளர் ஏ.ஆஸாத், பல்கலைக் கழக முதுநிலை பொது மேலாளர் வி.என்.ஏ.ஜலால், சட்டக் கல்லூரி முதல்வர் நிலாமுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com