சுதந்திர தினம்: ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் 1,500 காவலர்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக ரயில் நிலையங்களில் 1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.


சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக ரயில் நிலையங்களில் 1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
இதனால், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
1,500 காவலர்கள்: சென்னை எழும்பூர், சென்ட்ரல், கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் 1,500 காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை ரயில்வே போலீஸ் பிரிவில் 800 காவலர்களும், திருச்சி ரயில்வே போலீஸ் பிரிவில் 700 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில்வே போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
மூன்றடுக்குப் பாதுகாப்பு: சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, திருச்சி, மதுரை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் வெளிப்புற நுழைவு வாயில், உள்புற நுழைவு வாயில், நடைமேடை ஆகியவற்றில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதிக்கப்படுவதோடு, அவர்களின் உடமைகளை பரிசோதனை இயந்திரம் மூலம் கண்காணித்து உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றனர். அனைத்து ரயில் நிலையங்களும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் முழுமையாக ரயில்வே போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கும். ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வர அறிவுறுத்தல்: தமிழக ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியது: சுதந்திரதினத்தை முன்னிட்டு, ரயில் நிலையங்களில் 24 மணி நேர தீவிர கண்காணிப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இந்த பணி புதன்கிழமை நள்ளிரவு வரை தொடரும். 
ரயில் நிலையங்களில் காத்திருப்போர் அறை, நடைமேடைகள், மக்கள் கூடும் இடங்கள், வெளிப்பகுதிகல் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். ரயில்களில் செல்ல வரும் பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகு, உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். எனவே, ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வருவது நல்லது. இதன் மூலம், ரயிலை பிடிப்பதில் ஏற்படும் பிரச்னையை தவிர்க்கலாம்.
அதேபோல், சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயிலில் செல்ல விரும்பும் பயணிகள் சற்று முன்னதாக ரயில் நிலையத்துக்கு வருவது நல்லது என்று ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com