படுக்கை, ஏசி வசதி கொண்ட அரசுப் பேருந்துகளுக்கான கட்டணத்தை குறைக்க முடிவு

படுக்கை, ஏசி வசதி கொண்ட அதிநவீன அரசு விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணத்தை சாதாரண நாள்களில் 10 முதல் 15 சதவீதம் குறைத்து வசூலிக்க முடிவு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
படுக்கை, ஏசி வசதி கொண்ட அரசுப் பேருந்துகளுக்கான கட்டணத்தை குறைக்க முடிவு


படுக்கை, ஏசி வசதி கொண்ட அதிநவீன அரசு விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணத்தை சாதாரண நாள்களில் 10 முதல் 15 சதவீதம் குறைத்து வசூலிக்க முடிவு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு அதிநவீன வசதிகொண்ட 40 புதிய பேருந்துகள் அண்மையில் வழங்கப்பட்டன. படுக்கை மற்றும் படுக்கையுடன் கூடிய குளிர்சாதன வசதி, கழிப்பறை, அவசரகால கதவு மற்றும் ஜன்னல், தீயணைப்புக் கருவி, தானியங்கி கதவு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இப்பேருந்துகளில் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய பேருந்துகளில் கி.மீட்டருக்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை - சேலம் ரூ.725, போடிநாயக்கனூர் ரூ.1,110, ஈரோடு ரூ.905, கோபிசெட்டிபாளையம் ரூ.955, மதுரை ரூ.975, கரூர் ரூ.820, கோயம்புத்தூர் - பெங்களூருவுக்கு ரூ.805 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டணத்தைக் குறைக்க அரசாணை: இந்நிலையில், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர்த்து சாதாரண நாள்களில் படுக்கை, ஏசி வசதி கொண்ட அதிநவீன அரசு விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணத்தை சிறிய அளவில் குறைத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதி அரசு வெளியிட்டுள்ளது.
திங்கள் முதல் புதன் வரை: அதன்படி, திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரையில், கழிப்பறை வசதியுள்ள அரசு சொகுசுப் பேருந்துகளுக்கு ஒரு கி.மீட்டருக்கு ரூ.1.05 எனவும், படுக்கை வசதியுள்ள அரசு ஏசி பேருந்துகளுக்கு கி.மீட்டருக்கு ரூ.1.80 எனவும், படுக்கை வசதியுள்ள (குளிர்சாதன வசதி இல்லாதது) அரசு சொகுசு பேருந்துகளுக்கு கி.மீட்டருக்கு ரூ.1.35 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
வியாழன் முதல் ஞாயிறு வரை: எஞ்சிய நாள்களான வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில், கழிப்பறை வசதியுள்ள அரசு சொகுசுப் பேருந்துகளுக்கு கி.மீட்டருக்கு ரூ.1.15 எனவும், படுக்கை வசதியுள்ள அரசு ஏசி பேருந்துகளுக்கு கி.மீட்டருக்கு ரூ.2 எனவும், படுக்கை வசதியுள்ள (குளிர்சாதன வசதி இல்லாதது) அரசு சொகுசு பேருந்துகளுக்கு கி.மீட்டருக்கு ரூ.1.55 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டணம் விடுமுறை மற்றும் பண்டிகை நாள்களுக்கும் பொருந்தும்.
10 நாள்களுக்குள் அமல்: இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியது: விடுமுறை, பண்டிகை நாள்களைத் தவிர்த்து சாதாரண நாள்களில் படுக்கை, ஏசி வசதி கொண்ட அரசு விரைவு பேருந்துகளில் கட்டணம் குறைத்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த 10 நாள்களுக்குள் அமல்படுத்தப்பட உள்ளது. பயணிகளுக்கு அரசுப் பேருந்து பயணத்தில் சிறப்பான வசதியை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய வகை பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றனர் அதிகாரிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com