அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட பயிற்சி மையம்: கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு

மாணவிக்கு கல்விக் கட்டணத்தை திருப்பித் தர பேஷன் டிசைனிங் பயிற்சி மையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட பயிற்சி மையம்: கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு


மாணவிக்கு கல்விக் கட்டணத்தை திருப்பித் தர பேஷன் டிசைனிங் பயிற்சி மையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தெய்வானை பழனியப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
எனது மகள் மகாலட்சுமிக்கு, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் 5 ஆண்டு பேஷன் டிசைன் படிப்புக்காக விண்ணப்பித்திருந்தோம். இந்த மையம் ராஜஸ்தானில் உள்ள மேவார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது.
கடந்த மே மாதம் கலந்தாய்வு நடத்தி சேர்க்கை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் பருவத்துக்கு ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 500 மற்றும் போக்குவரத்து வசதிக்காக ரூ.24 ஆயிரத்து 500 வசூலித்தார்கள். பயிற்சி மையத்தில் சேர்ந்த பின்னரே அந்த மையம் எந்தவொரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும் பெறவில்லை என்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் பயிறசி மையம் தவறான தகவலை அளித்துள்ளதையும், இந்த மையம் வழங்கும் சான்றிதழ் தகுதியற்றது என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நாங்கள் கட்டிய கல்விக் கட்டணத்தை திருப்பிக் கேட்டால், ரூ.10 ஆயிரத்தை மட்டும் திருப்பித் தருவதாக பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாங்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை திருப்பித் தர பயிற்சி மையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சம்பந்தப்பட்ட பயிற்சி மையம் மேவார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தகைய பயிற்சி மையத்தில் தனது மகள் படிப்பை முடித்தால், அதனால் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக, அவரது படிப்பை பாதியிலேயே மனுதாரர் நிறுத்திவிட்டார். எனவே, மனுதாரரின் மகளிடம் கல்விக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பெறப்பட்ட ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்தை 45 நாள்களுக்குள் பயிற்சி நிறுவனம் திருப்பித் தர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com