தண்ணீர் வந்தும் விவசாய வேலையில்லை 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கப்படுவது எப்போது? விவசாய தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

தண்ணீர் வந்தும் விவசாயப் பணிகள் ஏதும் இல்லாததால், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் 100 நாள் வேலைத் திட்டத்தை தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் வந்தும் விவசாய வேலையில்லை 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கப்படுவது எப்போது? விவசாய தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

தண்ணீர் வந்தும் விவசாயப் பணிகள் ஏதும் இல்லாததால், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் 100 நாள் வேலைத் திட்டத்தை தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து ஜூலை 19- ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகளில் தண்ணீர் பாயும் நிலையில், வெண்ணாறு பிரிவு உள்ளிட்ட சில இடங்களில் இன்னமும் தண்ணீர் முழுமையாக வரவில்லை. இதற்கு, நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாராதது, நீர்ப் பாசனத்தை முறைப்படுத்தாதது போன்றவைதான் காரணம் என்று விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.
தண்ணீர் திறக்கப்பட்டு விட்டதால், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்துக்கானப் பிரச்னை இருக்காது என கூறப்பட்டு வந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நாள்களில் அரசு சார்பில் வழங்கப்படும் 100 நாள் வேலைத் திட்டமும் தொடங்கப்படாதது அவர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமாரராஜா கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் 4 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். நாற்றுப் பறித்தல், நடவு நடுதல், அறுவடை உள்ளிட்ட விவசாயப் பணிகளே பெரும்பாலானோருக்குப் பிரதானம். தற்போது தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான ஆற்றுப்பாசன விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடியைத் தொடங்கியுள்ளனர். இதற்கான முன்கட்ட உழவுப் பணிகளே தற்போது நடைபெற்று வருகின்றன. 
இதன் பின்னர், விவசாயப் பணிகள் தீவிரமடைய எப்படியும் ஒரு மாதம் ஆகும். இதனால், தண்ணீர் வந்தவுடன் உடனடியாக விவசாயத் தொழிலாளர்களுக்கு, விவசாயப் பணிகள் எதுவும் இருப்பதில்லை. குறைந்தது ஒரு மாதத்துக்குப் பிறகே விவசாயத் தொழிலாளர்களுக்குப் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அதுவரையில் அவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
100 நாள் வேலைத் திட்டம் தொடங்கப்படுவது எப்போது?
2005-இல் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 2009-இல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் பெற்ற திட்டமே 100 நாள் வேலைத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்படி, கிராமப்புறத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு, விவசாய வேலை இல்லாத நாள்களில் 100 நாள்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். கிராமப்புற சாலைகள், குளம், வாய்க்கால் உள்ளிட்டவைகளை சீரமைத்தல், இடுகாடு சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படும். 
விவசாயப் பணிகள் இல்லாத நாள்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு இந்த 100 நாள் வேலைத் திட்டமானது அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க பேருதவியாக இருந்தது.
இந்நிலையில், நிகழாண்டில் இதுவரையிலும் 100 நாள் திட்டப் பணிகள் தொடங்கப்படாதது விவசாயத் தொழிலாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் இன்னமும் முழுமையாக தொடங்கவில்லை. தண்ணீர் சில இடங்களுக்கு சென்றடையாததே இதற்கு காரணம். சாகுபடி இல்லாததால், விவசாயத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். 100 நாள் திட்டத்துக்காக மத்திய அரசிடமிருந்து பெறப்படும் தொகையானது, 
வேறு பணிகளுக்குத் திருப்பி விடப்படுவது சட்ட விரோதமானது. 100 நாள் வேலைத் திட்டத்துக்காக பஞ்சாயத்துகளில் ஒதுக்கப்படும் நிதியானது ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.3.50 லட்சம் வரை தடுப்பணைகள், 
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் என அண்மையில் சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 250 கோடி நிதி பயன்படுத்தப்பட உள்ளது. 
100 நாள் வேலைக்கென மத்திய அரசிடமிருந்து 2016-இல் ரூ.240 கோடி, 2017-இல் 127 கோடி, 2018-இல் 916 கோடி என நிதி பெறப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகை முழுவதும் 100 நாள் திட்டப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவே இல்லை. 
அத்துடன் 100 நாள் வேலைகளும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக, திருவாரூர் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் இல்லாத மார்ச், ஏப்ரல் மாதங்களில் 100 நாள் வேலைத் திட்டம் முழுமையாக நடைபெறும். பின்னர், சாகுபடி வேலைகள் தொடங்கப்பட்டதும், அதற்கு இடைஞ்சல் இல்லாத வகையில், பணிகள் அவ்வப்போது வழங்கப்படும். நிகழாண்டில், 100 நாள் பணிகள் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். 
இதையடுத்து, ஓரிரு நாள்கள் பணிகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, இன்னமும் பணிகள் ஏதும் வழங்கப்படவில்லை. விவசாயப் பணிகளும் இல்லாத நிலையில் விவசாயத் தொழிலாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே, 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார். 
விவசாயப் பணிகளுக்கு முதுகெலும்பாக இருக்கக் கூடியவர்கள் விவசாயத் தொழிலாளர்கள். கடந்த சில ஆண்டுகளாக விவசாயப் பணிகள் இயந்திரமயமாக மாறி வருவதால், விவசாயத் தொழிலாளர்களுக்கான விவசாயப் பணிகள் குறைந்து வருகின்றன. விவசாயத் தொழிலாளர்களும் வேறு பணிகளையும், வேறு இடங்களையும் நாடிச் செல்கின்றனர். 
அதேநேரம், குறைந்த கல்வி அறிவு, குடும்ப சூழல், வயது முதிர்வு காரணமாக பெரும்பாலான விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் ஊரிலேயே, வாழ்வாதாரம் இல்லாத நிலையில், வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க 100 நாள் வேலைத் திட்டத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com