மின்வாரியத்தில் நிலக்கரி இறக்குமதி ஊழல்: சிபிஐ விசாரணை தேவை

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம், நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர்
மின்வாரியத்தில் நிலக்கரி இறக்குமதி ஊழல்: சிபிஐ விசாரணை தேவை


தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம், நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அக்டோபர் 2012 முதல் பிப்ரவரி 2016 வரை தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ.1599.81 கோடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை 2016-17 ஆம் ஆண்டுக்கான சி.ஏ.ஜி அறிக்கை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே, மத்திய அரசின் வருவாய் புலனாய்வு துறை அறிக்கையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்தோனேஷிய நிலக்கரி அந்த நாட்டின் துறைமுகங்களில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டாலும், சிங்கப்பூர், துபாய், ஹாங்காங் பிரிட்டிஷ் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாக அந்த நாட்டில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் ரசீது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள நிலக்கரி விலையைவிட இந்த இடைத் தரகர்கள் நிர்ணயித்த விலை 50 முதல் 100 சதவீதம் வரை அதிகம். அப்படி இறக்குமதி செய்துள்ள 40 முன்னணி இறக்குமதியாளர்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மத்திய வருவாய் புலானாய்வுத்துறை அறிக்கை மற்றும் சி.ஏ.ஜி. அறிக்கை இரண்டும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் 2012 முதல் 2016-ஆம் ஆண்டு வரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரூ.12,250 கோடி மதிப்புள்ள 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி மெகா ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த மெகா ஊழல் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்க மறுத்தால், நிலக்கரி ஊழல் பற்றி விசாரிக்க திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் என்றார் ஸ்டாலின்
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து: உலக நாடுகளுக்கெல்லாம் சமத்துவம், சமூக நீதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றுடன், பன்முகத்தன்மையின் காவல் அரணாகவும் மற்றும் ஆக்கப்பூர்வமான ஜனநாயகத்தின் அடையாளமாகவும் என்றைக்கும் இந்தியத் திருநாடு விளங்கிடவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்திடவும், வியப்பூட்டும் தொழில் முன்னேற்றம் பெற்றிடவும், பொருளாதாரத்தில் முதன்மையான நாடாக நம் தாய்நாடு பீடு நடை போடுவதற்கும் இந்த 72-ஆவது சுதந்திர தினத்தில் 125 கோடி மக்களும் ஒன்றிணைந்து கரம் கோர்ப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com