ராணுவப்பேட்டை: வீரம் விளையும் மண்..!

இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவு சேவைகளுக்கு நான்கு தலைமுறைகளாக வீரர்களை அனுப்பி வருகிறது வேலூர் மாவட்டத்திலுள்ள ராணுவப்பேட்டை கிராமம்.
ராணுவப்பேட்டை: வீரம் விளையும் மண்..!



இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவு சேவைகளுக்கு நான்கு தலைமுறைகளாக வீரர்களை அனுப்பி வருகிறது வேலூர் மாவட்டத்திலுள்ள ராணுவப்பேட்டை கிராமம். நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் வேளையில் இந்தக் கிராமம் குறித்து அறிந்து கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.
சிப்பாய் புரட்சி: வேலூர் கோட்டையில் 1806-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் நடத்திய ஆயுதப் புரட்சியே நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமாகும். அத்தகைய பெருமை மிக்க வேலூர் மாவட்டம்தான் தமிழகத்திலேயே அதிக அளவில் ராணுவத்துக்கு இளைஞர்களை அனுப்பி வருகிறது. தற்போதைய நிலையில் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களில் சுமார் 25 ஆயிரம் பேர் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
இச்சிறப்புமிக்க வேலூர் மாவட்டத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது கம்மவான்பேட்டை எனும் ராணுவப்பேட்டை. வேலூர்-திருவண்ணாமலை எல்லையில் உள்ள இந்தக் கிராமத்திலிருந்து ராணுவத்தின் முப்படைகளுக்கும் 4 தலைமுறைகளாக வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், பகத்சிங் ஆகியோரின் புகைப்படமும், உடல் மண்ணுக்கு உயிர் நாட்டுக்கு', வீரம் விளைஞ்ச ராணுவம் நிறைஞ்ச மண்ணு' என்ற வாசங்கள் தாங்கிய பெயர் பலகையுடன் வரவேற்கும் இந்தக் கிராமம், அதன் உள்ளேயும் தேசப்பற்றை விளக்கும் பல்வேறு சுவரொட்டிகளுடன் வியக்க வைக்கிறது. 
வீரம் மிக்க கிராமம்: மலைகள் சூழ்ந்த அமைதியான இக்கிராமத்திலுள்ள பெரும்பாலானோர் ராணுவ போர்களத்தை சந்தித்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் 2 பேராவது ராணுவத்தில் பணியாற்றியுள்ளதுடன், பணியாற்றியும் வருகின்றனர். 
இதுகுறித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கே.சி.ராஜ் கூறியதாவது: 
ராணுவப்பேட்டை கிராமத்தினர் ராணுவத்தில் பணியாற்றுவதையே பெருமையாகக் கருதுகிறோம். எனது அப்பா, தாத்தாவும் ராணுவத்தில் பணியாற்றியுள்ளனர். நானும் 25 ஆண்டுகள் எல்லை பாதுகாப்பு வீரராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். 
ராணுவத்தில் பணியாற்றியபோது சத்தீஷ்கரில் நக்ஸலைட் வேட்டை நடந்தது. அப்போது, எனக்கு முன்னால் சென்ற வீரர் ஒருவர் கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்துவிட்டார். அதை அறிந்து எனது குடும்பத்தினர் ராணுவத்திலிருந்து வந்துவிடும்படி கூறினர்.
எனினும், தொடர்ந்து, பணியாற்றி ஓய்வு பெற்றேன். இருந்தபோதிலும் எனது மகனையும் ராணுவத்தில் சேர்க்கவே ஆர்வமாக உள்ளேன். அதற்காக அவரும் தயாராகி வருகிறார் என்றார் அவர்.
தம்பதியின் அர்ப்பணிப்பு: 
இதேபோல், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மணி, ஜெயலட்சுமி தம்பதி கார்கில் போரில் ஒரு மகனை இழந்தபோதும், மேலும் இரு மகன்களையும் ராணுவத்தில் சேர்த்துவிட்டு தனியாக வசித்து வருகின்றனர். 
அவர்கள் கூறுகையில், கடந்த 1999-ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடி தாக்குதலில் எங்களது 2-ஆவது மகன் நாராயணன் உயிரிழந்தார். திருமணம் நடக்க இருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்ட சோகத்துக்குப் பிறகும் எங்களது முதல், 3-ஆவது மகன்கள் ராணுவத்தில் சேர்ந்தனர். அவர்களைப் போல் எங்களது பேரன்களையும் ராணுவத்தில் சேர்க்கவே ஆசைப்படுகிறோம் என்றனர். 
இவர்களைப்போல் ஏராளமான பெற்றோர் நாட்டிற்காக தங்களது இன்ப, துன்பங்களை அர்ப்பணி த்தும், தொடர்ந்து தங்களது மகன்களை ராணுவத்தில் சேர்த்தும் வருகின்றனர். இந்தக் கிராமத்தில் மருத்துவர்கள், பொறியாளர்களைவிட ராணுவத்தில் பணியாற்றுவோருக்கு பெண் வீட்டார் வரன் கொடுப்பதை அதிக அளவில் விரும்புவதும் வியப்பாக உள்ளது. 
வீரம் விளைஞ்ச மண்: ராணுவ வீரர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் எல்லைகளில் பணியாற்றுவதாலேயே நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். 
அத்தகைய பாதுகாப்பற்ற நிலையை நேரடியாக அனுபவமாக உணர்ந்தபோதும் 4 தலைமுறைகளாக ராணுவத்துக்கு வீரர்களை தயார் செய்து அனுப்பி வரும் ராணுவப்பேட்டை கிராமம் வீரம் விளைஞ்ச மண் என்பதில் வியப்பில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com