வெள்ள அபாயம்: காவிரிக் கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு நீர் திறந்து விடப்படுவதால், காவிரிக் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு நீர் திறந்து விடப்படுவதால், காவிரிக் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பேட்டி: காவிரிக் கரையோர மாவட்டங்களான தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர்நிலைகளில் நீர் வெளியேறும் போது நீச்சல், மீன் பிடித்தல், பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
குழந்தைகளை ஆற்றங்கரையில் குளிக்க வைப்பதோ, விளையாட வைப்பதோ கூடாது. பாதுகாப்பான இடங்களில் கால்நடைகளைக் கட்டி வைக்க வேண்டும். அணைகளிலிருந்து அதிகமான தண்ணீர் வெளியேறும் போது தாழ்வான பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
செல்ஃபி வேண்டாம்: நீர்நிலைகளில் தன்படம் (செல்ஃபி) எடுப்பது அறவே கூடாது. பொது மக்கள் மத்தியில் எந்தவித பீதியும் ஏற்படக் கூடாது என்பதையும் பாதிப்புக்குள்ளாகும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
1.20 லட்சம் கன அடி நீர்: மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1.20 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதே நிலையில் உள்ளது. பவானிசாகர் அணைக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து 45 ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணைக்கு 11 ஆயிரத்து 968 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 11 ஆயிரத்து 629 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. 
ஒலிபெருக்கி, தண்டோரா மூலம்...மேட்டூரிலிருந்து வெளியேற்றப்படும் வெள்ள நீருடன் பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளிலிருந்து தற்போது திறக்கப்படும் நீரும் காவிரி ஆற்றில் சேரும். ஆகவே காவிரி ஆற்றில் வெள்ள நீரின் அளவு விநாடிக்கு 2 லட்சம் கன அடியாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றங்கரைகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கண்காணிப்புக் குழு: கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான கண்காணிப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக இந்த குழு மேற்கொள்ளும். தடை செய்யப்பட்ட நீர்நிலைகளில் செல்வோர்களைக் கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால், பேரிடர் ஆணையாளர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com