திருப்பத்தூர் அருகே சித்திரங்கள் நிரம்பிய 2 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே நத்தம் கிராமத்தில் சித்திரங்கள் நிரம்பிய 2 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட நடுகற்கள்.
திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட நடுகற்கள்.


திருப்பத்தூர் அருகே நத்தம் கிராமத்தில் சித்திரங்கள் நிரம்பிய 2 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, வீரராகவன், காணிநிலம் மு.முனிசாமி மற்றும் சமூக ஆர்வலர் ஜானகிராமன் ஆகியோர் திருப்பத்தூ ரை அடுத்த நத்தம் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது, பழைமையான 2 நடுகற்களைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியதாவது: 
திருப்பத்தூரிலிருந்து தருமபுரி செல்லும் வழியில் 15-ஆவது கி.மீ. தொலைவில் உள்ள நத்தம் கிராமத்தில் ஒய்சாளர் காலத்தைச் சேர்ந்த கி.பி 13-ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட 2 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடுகற்கள் இரண்டும் வேப்ப மரம் சாய்ந்த காரணத்தால் உடைந்த நிலையில் நிலத்தில் படுக்கவைக்கப்பட்டுள்ளன. 2 நடுகற்களும் 6 அடி உயரத்தில் 5 அடி அகலத்துடன் உள்ளன. இந்த 2 நடுகற்களிலும் வீரமரணம் அடைந்த வீரனோடு அழகான பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 
முதல் நடுகல் 6 அடி வட்ட வடிவ கல்லில் வலது பக்கக் கொண்டையுடன் வலது கையை மார்பில் வைத்த நிலையிலும், இடது கை உடைந்த நிலையிலும் காட்சித் தருகிறது. இடையில் குறுவாள் உள்ளது. வீரனின் இடது கால் செதுக்கப்பட்டுள்ள கல் உடைந்த நிலையில் காணப்படுகிறது.
நடுகல்லில் மேற்பகுதியில் 3 பெண்கள் விளையாடும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. கல்லின் வலது பக்க ஓரத்தில் 2 பணிப் பெண்கள் பல்லக்கைத் தூக்கிச் செல்கின்றனர். அதற்கு கீழே குதிரை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 
அதற்கும் கீழே பல்லக்கில் அரசி அமர்ந்துள்ளார். அரசியை வணங்கிய நிலையில் பணிப்பெண் ஒருவர் நிற்கிறார். அதற்கும் கீழாக மத்தளத்தை ஒரு பெண் கொட்ட, நாகசுரத்தை ஒரு பெண் ஊதும் காட்சி இடம்பெற்றுள்ளது. இக்காட்சி ஒய்சாளர் காலத்தில் இசைக் கலை மேம்பட்டிருந்ததையும், தமிழக இசைக் கலைஞர்கள் மதிப்புடன் போற்றப்பட்ட செய்தியையும் எடுத்துக்காட்டுகின்றது. 
மேலும், வலது கைப்பக்கத்தில் ஒரு மனித உருவமும், வலது கால்பக்கம் 3 மனித சிறு உருவங்களும் உள்ளன.
2-ஆவது நடுகல் 6 அடி உயரமும், 5 அடி அகலமும் உள்ளது. இக்கல்லில் வீரன் வலது பக்கம் கொண்டையிட்டு, இடது கையில் வில்லுடன் காட்சி தருகிறான். இடையில் குறுவாள் உள்ளது. அணிந்திருக்கும் ஆடை வடிவமைப்பு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வலது கால் அருகில் பெண் ஒருவர் அமர்ந்த நிலையில் தவக்கோலத்தில் உள்ளார். அவரை ஒருவர் வணங்கும் நிலையில் நின்று கொண்டிருக்கிறார். அதற்கும் சற்று மேலாக குதிரை உருவம் உள்ளது. குதிரைக்கு அருகே மனித உருவம் ஒன்று உள்ளது. இவ்வாறாக இந்த இரு நடுகற்களும் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் போரின் போது, குதிரை, இசைக் கலைஞர்கள் வீரர்களோடு இடம்பெற்றிருக்கும் காட்சி பண்டைத் தமிழரின் சிறப்புகளை எடுத்துரைக்கின்றன. இந்த நடுகற்களை இவ்வூர் மக்கள் வேடியப்பன் என்று அழைக்கின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com