வாஜ்பாய் மறைவு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாஜ்பாய் மறைவு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் திடீர் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் மிகச் சிறந்த அரசியல் ஆளுமை மிக்கவராகவும், சிறந்த பேச்சாளராகவும், கவிஞர்கள், அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாகவும் விளங்கியவர். அவரது மறைவு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிக்கிறது. தனது மூத்த மகனை இந்தியத் தாய் இழந்து விட்டாள். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.
முதல்வர் பழனிசாமி: பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். பிரதமராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 50 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திறம்பட செயலாற்றியவர். இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவரான வாஜ்பாய், சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மை உடையவராகவும் இருந்தார். அவருடைய மறைவு இந்தியாவுக்கே ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும், பாஜகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்வர்): நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாடு போற்றும் வகையில் அரும் பணியாற்றியவர். மூன்று முறை பிரதமராகப் பணியாற்றி நாட்டுக்கு தொண்டாற்றியவர். அனைவரும் மதிக்கும் வகையில் வாழ்ந்த வாஜ்பாய் மறைவுக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். 
மு.க.ஸ்டாலின் (திமுக): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன். கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, கருணாநிதியுடன் அன்பும் நட்பும் பாராட்டியவர் வாஜ்பாய். ஈழத் தமிழர்கள் உரிமை காக்க மதுரையில் கூட்டப்பட்ட டெசோ மாநாட்டில் பங்கேற்று தமிழினத்துக்குப் பெருமை சேர்த்தார். தனது ஆட்சிக்கே ஆபத்து என்று தெரிந்தும் கூட , திமுக ஆட்சியை அரசியல் சட்டத்துக்குப் புறம்பாக கலைக்க முடியாது என்று உறுதிபடக் கூறி அதன்படியே நின்றார். அவர் மறைவு நாட்டுக்கும்- நாட்டின் பன்முகத்தன்மைக்கும் பேரிழப்பாகும்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): வாஜ்பாய் மறைவு இந்திய நாட்டுக்கும், அரசியலுக்கும் மாபெரும் இழப்பு. வாஜ்பாயைப் பார்த்துத்தான் அப்போது பாஜகவில் இணைந்தேன். என்னை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியதுடன், மத்திய அமைச்சராகவும் ஆக்கினார். பாஜகவின் தலைவராக இருந்தாலும் சிறுபான்மையினர் மக்களின் நலனில் அக்கறை செலுத்தியவராக இருந்தவர்.
ராமதாஸ் (பாமக): இந்திய அரசியலில் மாற்றுக்கட்சி தலைவர்களாலும் மதிக்கப்பட்ட தலைவர் வாஜ்பாய். என் மீது தனிப்பட்ட முறையில் பாசமும், மரியாதையும் காட்டினார். அரசியல் நாகரிகத்தை போற்றிப் பாதுகாத்த பிதாமகனான வாஜ்பாயின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். 
விஜயகாந்த் (தேமுதிக): லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட தலைவராகவும், நாட்டுக்காக தங்க நாற்கர சாலை திட்டம் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்து, இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் வாஜ்பாய். பொக்ரான் அணு குண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றில் வெற்றிகண்டார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாஜக கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ (மதிமுக): இந்தியா ஒரு அணு ஆயுத வல்லரசு என்பதை பொக்ரான் சோதனையின் மூலம் உலகத்துக்கு நிரூபித்தவர். இந்தியாவின் சாலை கட்டமைப்பை வலுப்படுத்த நாடு முழுக்க தங்க நாற்கரச் சாலைக்கு காரணமானார். இந்தியாவிலுள்ள அனைத்துத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அவருடைய மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அவருடைய உறவினர்களுக்கும், பாஜக நண்பர்களுக்கும் மதிமுக சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இல.கணேசன் (பாஜக): வாஜ்பாய் மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதில் வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. சிறந்த பேச்சாற்றல், கவிதையாற்றல், நகைச்சுவை உணர்வுமிக்க அவர், மாறுபட்ட கருத்து கொண்டவர்களிடம் கூட மனம் திறந்து பேசி நட்புப் பாராட்டக் கூடியவர். பேரறிஞர் அண்ணாவிடம் நட்பும், பற்றும், மரியாதையும் கொண்டிருந்தார். 
எளிமையாகப் பல நற்செயல்களைச் செய்தவர். அவர் எதிரிகளே இல்லாதவர் என்று கூடச் சொல்லலாம். அவரது ஆன்மா நிச்சயம் நற்கதி அடையும் என்றார் அவர்.
தமிழிசை (பாஜக): கட்சி எல்லை கடந்து, மாநில எல்லை கடந்து, மொழி, மத எல்லைகளைக் கடந்து அனைவரையும் இணைத்த ஒரு தலைவர் வாஜ்பாய். அவர் மறைந்திருக்கிறார். கடன் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த இந்தியாவை, சிறிய நாடுகளுக்கு கடன் கொடுக்கும் நாடாக மாற்றியவர். பொக்ரானில் அணுகுண்டு வெடித்து இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியவர். இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாவலனாக இருந்தவர். அவரது இழப்பு மிகவும் பேரிழப்பு. 
பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): பாஜக தலைவராக வாஜ்பாய் இருந்த போது மதுரையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதையும், பிறகு அவர் பிரதமராக இருந்த போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸின் ஆலோசனையை ஏற்று, ஈழத் தமிழர் நலன் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதையும் இப்போது நன்றியோடு நினைவுகூருகிறேன்.
திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): அரசியல் கண்ணியத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் வாஜ்பாய். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடி சிறை சென்றார். தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட அவர், பிரதமராக இருந்த போது தமிழகத்துக்கு பல வளர்ச்சித் திட்டங்களை வழங்கினார். அவரைப் பிரிந்து வாடும் உறவினர்களுக்கும், பாஜக கட்சியினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜி.கே.வாசன் (தமாகா): வாஜ்பாய் அன்பானவர். அடக்கமானவர். பிரதமராக இருந்தபோது, பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். அவர் காலத்தில் நாடு வளர்ச்சி அடைந்தது. அவர் மறைவு பாஜகவுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பேரிழப்பு.
அன்புமணி (பாமக): இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான வாஜ்பாய்க்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னைக்குத் தீர்வு காண உண்மையாகவே அக்கறை கட்டியவர். அவருடைய மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
நிஜாமுதீன் (தேசிய லீக்) : பாஜக சார்பில் பிரதமரானாலும் வாஜ்பாய் அனைவருக்கும் பொதுவானவராகத் திகழ்ந்தவர். குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலையைக் கண்டித்தவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். 
டிடிவி தினகரன் (அமமுக): நெடிய அரசியல் வரலாற்றுக்கு சொந்தக்காரராகவும், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், சகோதர நேசத்தை முன்னிறுத்திய மனிதநேயம் கொண்ட மாமனிதர் வாஜ்பாய். அவரது இழப்பு இந்திய தேசத்துக்கு பேரிழப்பு. 
நடிகர் ரஜினிகாந்த்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.
கவிஞர் வைரமுத்து: இந்தியப் பெருந்தலைவர் வாஜ்பாயின் மரணம் என்பது ஒன்றல்ல. ஒரு தலைவருக்கும், ஒரு கவிஞருக்கும் என இரண்டு மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. வாஜ்பாய்க்கான கண்ணீர் மண் தொடும் பொழுது அவருக்கான பெருமைகள் விண் தொடும் என்பது எனது நம்பிக்கை.
அமெரிக்க தூதரகம்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு இந்தியாவைப் போன்று அமெரிக்காவுக்கும் மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இந்தியா-அமெரிக்கா உறவு மேம்படுவதில் அவருடைய பங்கு என்றைக்கும் போற்றத்தக்கது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை அமெரிக்க தூதரகம் தெரிவித்துக் கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com