வெள்ள பெருக்கெடுத்தும், தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் கடலுக்கு செல்லும் அவலமான நிலை: இரா.முத்தரசன்

வெள்ள பெருக்கெடுத்தும், தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் கடலுக்கு செல்லும் அவலமான நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். 
வெள்ள பெருக்கெடுத்தும், தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் கடலுக்கு செல்லும் அவலமான நிலை: இரா.முத்தரசன்

வெள்ள பெருக்கெடுத்தும், தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் கடலுக்கு செல்லும் அவலமான நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
கடந்த பல ஆண்டுகளாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் காவிரி பாசன மாவட்டங்கள், இவ்வாண்டும் அதேகதிக்கு ஆளாகியிருப்பது அவமானகரமானதாகும்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒருமாத காலமாகிவிட்டது. கர்னாடகத்தில் பெய்து வரும் பெருமழையில் மேட்டூர் அணை நிரம்பி, தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறந்துவிடப்படுகின்றது.

இந்நிலையில் காவிரி பாசன மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள பாசன வாய்கால்களில் தண்ணீர் செல்லாமல், விவசாயிகளும், பொதுமக்களும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்பகுதிகளான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாபா சத்திரம், திருவோணம் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை.

இம்மாவட்டத்தை சேர்ந்த வேளாண்மை துறை அமைச்சர் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் செல்கின்றது என்று தெரிவிக்கின்றார். தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் செல்ல ஏற்பாடுகள் செய்து வருகின்றோம் என்கின்றார்.

அமைச்சரின் அறிவிப்பும், ஆட்சித் தலைவரின் அறிவிப்பும் முன்னுக்குபின் முரணாக உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் ஒன்றியத்தின் தெற்குபகுதி திருமக்கோட்டை, பெருகவாழ்ந்தான் பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் செல்லவில்லை.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருவாரூர் தாலுக்கா, நன்னிலம், குடவாசல் விலங்கைமான் பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லாத நிலைமையே உள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொள்ளிடத்தில் கரைபுரண்டு தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டுள்ளது. ஆனால் கொள்ளிடம் ஒன்றியத்தின் எந்த பகுதிக்கும் இந்நாள் வரை தண்ணீர் செல்லவில்லை.

வேதாரண்யம் ஒன்றியம் தலைஞாயிறு ஒன்றியம், நாகை ஒன்றியம், செம்பனார் கோவில் ஒன்றியம் போன்ற பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லாத நிலை தொடர்கின்றது.

காவிரி பாசன மாவட்டத்தை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லவில்லை.

காரணம் என்ன? 

கர்நாடகத்திலிருந்து வினாடிக்கு இரண்டு லட்சம் கனஅடி தண்ணீர் காவிரியில் உபரி நீராக திறந்து விடப்பட்டு மேட்டூர் அணை முழுமையாக நிரம்பி, காவிரி, வெட்டாறு, வெள்ளாறு, கொள்ளிடம் போன்ற ஆறுகளில் தண்ணீர் பெருமளவிற்கு திறந்து விடப்பட்டும் உள்கிராமங்களுக்கு, பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக போவதன் காரணமென்ன?

ஆறுகளில் இருந்து பாசன வாய்கால்களுக்கு தண்ணீர் செல்லாமல் இருப்பதற்க என்ன காரணம்?

பாசன, வடிகால்களை தூர்வாருவதற்கு, குடிமராமத்து பணிகளுக்கு இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் எக்கதிக்கு ஆளானது?

முறையாகவும், முழுமையாகவும் தூர்வாரும் பணிகளை நேர்மையாக மேற்கொண்டிருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

தூர்வாரும் பணிகளுக்காக ஒதுக்கப்படும் பணம், அவை செலவிடப்பட்டது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கைநிரம்ப வெண்ணை இருந்தும் நெய்யிக்கு அலையும் பைத்தியக்காரனைப் போன்ற நிலைமை தான் இன்று ஏற்பட்டுள்ளது.

அணை நிரம்பியும் பாசனத்திற்கு பயன்படுத்தி வேளாண் உற்பத்தியில் ஈடுபட முடியாத பரிதாபகரமான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய மிக மோசமான நிலை ஏற்பட்டமைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com