காவிரியில் 2.50 லட்சம் கன அடி நீர் திறப்பு : வெள்ளத்தில் தத்தளிக்கும் கரையோர மாவட்டங்கள்!

பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரும், காவிரியில் சேர்ந்துள்ளதால் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் சுமார் 2.50 லட்சம் கன அடி நீர் செல்கிறது. தமிழக காவிரி கரையோர மாவட்டங்களில்
பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்.
பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்.


பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரும், காவிரியில் சேர்ந்துள்ளதால் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் சுமார் 2.50 லட்சம் கன அடி நீர் செல்கிறது. தமிழக காவிரி கரையோர மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி தவிக்கின்றனர்.
2.50 லட்சம் கன அடி திறப்பு: மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால், கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி அணையிலிருந்து விநாடிக்கு 1.75 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதுபோல், பவானிசாகர் அணையும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையில் இருந்து விநாடிக்கு சுமார் 75,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீரும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் கூடுதுறைக்கு கீழ் காவிரி ஆற்றில் வெள்ள நீரின் அளவு 2.50 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. 
இதனால் குமாரபாளையம்-பவானி பழைய பாலம், பள்ளிபாளையம்-ஈரோடு பழைய பாலம், கொக்கராயன்பேட்டை- ஈரோடு பாலம் ஆகிய மூன்று பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையத்திலிருந்து ஈரோட்டுக்கு புதிய பாலம் வழியாக மட்டுமே வாகனங்கள் சென்று வருகின்றன. 
குடியிருப்பில் புகுந்த 5 அடி வெள்ள நீர்: பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் சுமார் 5 அடி அளவுக்கு வெள்ள நீர் புகுந்தது. இதனால் கீழ் தளத்தில் இருந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்து படகில் அங்கு சென்ற மீட்புக் குழுவினர், அங்கு இருந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரை மீட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். 
இதுபோல், காவிரிக் கரையில் உள்ள பெருமாள், முருகன், விநாயகர் கோயில்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆவாரங்காடு, ஜனதா நகர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் மூழ்கடித்தது. இதேபோல, முருகன் கோயில் கரை, ஓம்காளியம்மன் கோயில் பாவடி தெரு, அக்ரஹாரம், காளியம்மன் கோயில் பகுதிகளில் 200 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மேலும், அக்ரஹாரம் ஜெயலட்சுமி தியேட்டர் பின்புறம் குமரன் நகரில் தண்ணீர் புகுந்தது. கரையோர வீடுகளில் இருந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு அக்ரஹாரம் ஊராட்சி தொடக்கப் பள்ளி, செளடேஸ்வரி மண்டபம், ஆவாரங்காடு நகராட்சி மண்டபம், சந்தைப்பேட்டை நாட்டாகவுண்டம்புதூரில் உள்ள பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய் துறை சார்பில் உணவு வழங்கப்பட்டது. 
பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 700 குடும்பங்களைச் சேர்ந்த 2,500 பேர் 14 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

வெள்ளம் சூழ்ந்த பவானி பழைய பேருந்து நிலையம். பின்னால், பவானி  ஆறு, பழைய பாலம்.
வெள்ளம் சூழ்ந்த பவானி பழைய பேருந்து நிலையம். பின்னால், பவானி  ஆறு, பழைய பாலம்.


நீரோட்டத்தை தடுக்கும் ஆகாயத் தாமரை: கொக்கராயன்பேட்டையில் இருந்து ஈரோடு மாவட்டம், லக்காபுரம் வழியாக சோலார் அருகே ஈரோடு-கரூர் சாலையை இணைக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம், வெண்டிபாளையம் நீர்மின் நிலைய தடுப்பணைக்கு கீழ் உள்ளது. அங்கு நீர்போக்கிகள் அனைத்தும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதால், அங்கு தேங்கியிருந்த ஆகாயத் தாமரை கொடிகள் கொக்கராயன்பேட்டை காவிரி பாலத்தில் சிக்கிக் கொண்டன. 
இதனால் ஆற்றின் நீரோட்டம் தடைபட்டு, பாலத்தைத் தொட்டும் விடும் அளவுக்கு தண்ணீர் மட்டம் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து, கொக்கராயன்பேட்டை பாலத்தின் கீழ் நீரோட்டத்தை தடுத்த ஆகாயத் தாமரைச் செடிகளை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அப்புறப்படுத்தினர். இருப்பினும், தண்ணீரின் வேகம் பாலத்தை தொட்டுக் கொண்டு செல்கிறது. 
எதிர்திசையில் ஆற்று நீர்: ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாசன வாய்க்கால்கள் ஆற்றில் கலக்கும் இடங்களில் இருந்து குமாரபாளையம் தொடங்கி, சோழசிராமணி வரை பாசன வாய்க்கால்களில் தண்ணீர் எதிர் திசையில் பெருக்கெடுத்து வந்து விளை நிலங்களில் புகுந்துள்ளது. இதனால் பல இடங்களில் விளை நிலங்களில் 10 அடி அளவுக்கு வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. 
நிவாரண முகாம்களில் 6000 பேர்: ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சார்ந்த மக்கள் 6 ஆயிரம் பேர் 60 -க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
ஈரோடு அருகே கருங்கல்பாளையம், காலிங்கராயன்பாளையம் ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களையும், அப்பகுதியில் வெள்ளப் பாதிப்புகளையும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு முன்னிலையில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தபிறகு ஆட்சியர் கூறியதாவது: 
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணையிலிருந்து 70 ஆயிரம் கன அடி நீரும், மேட்டூர் அணையிலிருந்து 1.75 லட்சம் கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், பவானி கூடுதுறையில் இவ்விரு ஆறுகளும் இணைவதன் காரணமாகவும் கொடுமுடி வரை 2.45 லட்சம் கன அடி நீர் செல்கிறது.
தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மேடான பகுதிக்கும், நிவாரண முகாம்களுக்கும் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு: இந்நிலையில், அரசின் உத்தரவுப்படி தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஈரோடு மாவட்டத்துக்கு வந்துள்ளது. இக்குழு மொடக்குறிச்சி முதல் கொடுமுடி வரை, பவானி பகுதி, சத்தியமங்கலம் பகுதி என 3 பிரிவுகளாகப் பிரிந்து காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். 2 நாள்கள் முன்னதாகவே 100 வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி ஈரோடு மாவட்டத்தில் 64 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இம்முகாம்களில் 2 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, உணவு, குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இம்முகாம்களில் உள்ள பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளைக் கண்காணிக்கவும், மேலும் தேவையான முகாம்களை அமைக்கவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய புதிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 
இதன் மூலம், நிவாரண முகாம்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கண்காணிக்கப்படும். 24 மணி நேரமும் உதவி இயக்குநர் நிலையில் உள்ள அலுவலரின் தலைமையில் இந்த அலுவலகம் இயங்கும். தேவை இருப்பின் புதிய முகாம்கள் அமைக்கப்படும். மேலும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையை 0424 - 2253399, 2220999 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 
பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அணையின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றார்.
பரிசல்களில் தஞ்சமடைந்த மக்கள்: காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளகால் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள தமிழர்கள் பரிசல்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
காவிரி ஆற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சம்புருட்டு, புளியமரத்து கொம்பு ஆகிய கிராமங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இந்நிலையில், அப் பகுதியை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கி உள்ளதால், கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தங்கள் பரிசல்களில் தஞ்சமடைந்துள்ளனர். 
கொள்ளிடக் கரைகளில் உடைப்பு: கொள்ளிடத்தில் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் அரியலூர் மாவட்டம் தா. பழூர், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள அணைக்குடி, முட்டுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளின் கொள்ளிடக் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் விளை நிலங்களைச் சூழ்ந்தது. 
இதேபோல, திருமானூர் அருகேயுள்ள வைப்பூர் கிராமத்தில் ஏற்பட்ட கரை உடைப்பால் கொள்ளிட நீர் புகுந்தது. 200-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் வெளியேறுமாறு வருவாய்த் துறையினர் அறிவுறுத்தினர். சாத்தம்பாடி, விழுப்பணாங்குறிச்சி, வரப்பணாங்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் கொள்ளிட நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com