குறைந்த மதிப்பெண் பெற்றவர்களைக் கொண்டு கல்லூரி காலி இடங்களை நிரப்ப வேண்டியதில்லை: உயர் நீதிமன்றம்

முதுநிலை பட்டப் படிப்பில் காலி இடங்கள் இருப்பதற்காக மதிப்பெண் குறைவாகப் பெற்ற மாணவர்களைக் கொண்டு அவற்றை நிரப்ப வேண்டிய அவசியம் கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
குறைந்த மதிப்பெண் பெற்றவர்களைக் கொண்டு கல்லூரி காலி இடங்களை நிரப்ப வேண்டியதில்லை: உயர் நீதிமன்றம்


முதுநிலை பட்டப் படிப்பில் காலி இடங்கள் இருப்பதற்காக மதிப்பெண் குறைவாகப் பெற்ற மாணவர்களைக் கொண்டு அவற்றை நிரப்ப வேண்டிய அவசியம் கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹைதராபாதைச் சேர்ந்த மாணவி தாண்டேக் ரோகிணி தாக்கல் செய்த மனுவில், சென்னை பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை விலங்கியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்தேன். 
மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்த காரணத்தால் எனக்கு இடம் வழங்க கல்லூரி நிர்வாகம் மறுத்து விட்டது. ஆனால், கல்லூரியில் முதுநிலை விலங்கியல் பாடப்பிரிவில் பல இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. எனவே, எனக்கு கல்லூரி நிர்வாகம் இடம் வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கல்லூரியில் விலங்கியல் பாடப் பிரிவில் காலி இடங்கள் உள்ளன. எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்தவரான மனுதாரருக்கு, இடஒதுக்கீட்டின் கீழ் இடம் வழங்காவிட்டாலும், ஏதாவது ஒரு ஒதுக்கீட்டின் கீழ் இடம் ஒதுக்க வேண்டும் என்றார். 
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், பிற மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.சி பிரிவினர், இங்கு இதர பிரிவினராகவே கருதப்படுவர். இந்த இதர பிரிவில் மாணவர் சேர்க்கை கோருவோர், இளநிலை படிப்பில் 71 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே முதுநிலை படிப்பில் இடம் வழங்க முடியும். ஆனால், இடம் ஒதுக்கக் கோரியுள்ள மனுதாரர் 61 சதவீதம் மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார். எனவே, அவருக்கு இடம் வழங்க முடியாது என வாதிட்டார். 
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முதுநிலை பட்டப் படிப்பில் பல இடங்கள் காலியாக இருப்பதால், குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. 
இதனை அனுமதித்தால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com