பருவ மழை: 7 மாநிலங்களில் 868 பேர் பலி

நிகழாண்டு பருவ மழை தொடங்கியதிலிருந்து கேரளம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 868 பேர் பலியாகியுள்ளனர்.
பருவ மழை: 7 மாநிலங்களில் 868 பேர் பலி


நிகழாண்டு பருவ மழை தொடங்கியதிலிருந்து கேரளம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 868 பேர் பலியாகியுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய அவசரகால உதவி மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நிகழ் பருவ மழை காலத்தில், வெள்ளம், நிலச்சரிவுகள் தொடர்பான சம்பவங்களில் கேரளத்தில் இதுவரை 247 பேர் பலியாகியுள்ளனர். மேலும், உத்தரப் பிரதேசத்தில் 191 பேர், மேற்கு வங்கத்தில் 183 பேர், மகாராஷ்டிரத்தில் 139 பேர், குஜராத்தில் 52 பேர், அஸ்ஸாமில் 45 பேர், நாகாலாந்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் 28, மேற்கு வங்கத்தில் 5 என 33 பேர் மாயமாகியுள்ளனர். மழை தொடர்பான சம்பவங்களில் மொத்தம் 274 பேர் காயமடைந்துள்ளனர்.
கேரளத்தில் உள்ள 14 மாவட்டங்களில் சுமார் 2.11 லட்சம் பேர் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 32,500 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 43 குழுக்களும், 163 படகுகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், விமானப் படையின் 23 ஹெலிகாப்டர்கள், 11 விமானங்கள், கடற்படையின் 51 படகுகள், கடலோர காவல் படையின் 30 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 60 படகுகளுடன் ராணுவத்தினரும் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதவிர 1,000 மிதவை கவசங்களும், 1,300 ரப்பர் படகுகளும் கேரளத்துக்கு கூடுதலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 
மற்ற மாநிலங்களில்...: மகாராஷ்டிரத்தில் 26 மாவட்டங்களும், அஸ்ஸாமில் 23, மேற்கு வங்கம் 23, உத்தரப் பிரதேசத்தில் 13, நாகாலாந்தில் 11, குஜராத்தில் 10 மாவட்டங்களும் மழை-வெள்ளத்தால் பாதிப்பைச் சந்தித்துள்ளன. 
அஸ்ஸாமில் சுமார் 11.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27,600 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 2.27 லட்சம், 1.74 லட்சம் பேர் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அவசரகால உதவி மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com