மழை -வெள்ளம்: மக்கள் பீதி அடையத் தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மழை -வெள்ளத்தால் தமிழக மக்கள் அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். 
மழை -வெள்ளம்: மக்கள் பீதி அடையத் தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


மழை -வெள்ளத்தால் தமிழக மக்கள் அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். 
காவிரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் ஏற்படும் விளைவுகள் குறித்து, சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு அறையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது:
கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து விநாடிக்கு மொத்தம் 2 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரும், பவானி மற்றும் அமராவதி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரும், மாயனூருக்கு பெருக்கெடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாயனூரில் விநாடிக்கு 3 லட்சம் கன அடி அளவுக்கு நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு, நாமக்கல், கரூர்: எனவே, ஈரோடு, நாமக்கல் திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், நிவாரண மையங்களுக்கு செல்லும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேட்டூர், பவானிசாகர் ஆகிய அணைகளில் 2.65 லட்சம் கன அடி நீர்வரத்து இருக்கும் என்று மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோர மாவட்டங்களான தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், அரியலூர்,கருர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் நீரால் சூழப்படலாம் என எச்சரிக்கை எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,410 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 96 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 16 முகாம்களில் 1,724 பேரும், ஈரோட்டில் 66 முகாம்களில் 5,875 பேரும், கன்னியாகுமரியில் 10 முகாம்களில் 511 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று கரூரில் 217 பேரும், தருமபுரியில் 46 பேரும், திருச்சியில் 37 பேரும் தலா ஒரு முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com