வாஜ்பாய்க்கு தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் பூத உடலுக்கு தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வைகோ, திருமாவளவன், கிருஷ்ணசாமி,
வாஜ்பாய்க்கு தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

 மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பூத  உடலுக்கு தீன தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் அளித்த பேட்டி: 
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: பாரத ரத்னா வாஜ்பாய் அப்பழுக்கற்ற தேச பக்தர். தேசத்தையும், மக்களையும் தெய்வமாக வணங்கியவர். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தனது வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்தவர். பத்திரிகையாளராகி தன்னுடைய எழுத்து வன்மையால் கோடிக்கணக்கான இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈர்த்தார். பாரதிய ஜன சங்கத்தில் ஆரம்பத்தில் முக்கிய பங்காற்றியவர்.
இளைஞராக இருந்த அவரின் நாவன்மையைப் பார்த்து நிச்சயம் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என ஜவாஹர்லால் நேரு கணித்தார். அவசரநிலைக்கு எதிராகப் போராடி, 19 மாதங்கள் சிறை சென்றார். பாஜகவை இந்தியாவின் மூலை முடுக்கிலுள்ள மக்களிடம் எடுத்துச் சென்றவர். பொக்ரான் அணு குண்டுச் சோதனை நடத்தி, இந்தியா உலக நாடுகளுக்கு சளைத்ததல்ல எனக் காட்டியதும் அவரே. விஞ்ஞானி அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக உயர்த்தி அழகு பார்த்தவர். சாலைக் கட்டுமானப் பணி, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து துறைகளில் இந்தியாவை முன்னேற்றேப் பாதைக்கு கொண்டு சென்றார். அவரது ஆட்சியில்தான் முதன் முதலாக நான்கு வழிச்சாலை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. கார்கில் யுத்தத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றுத் தந்தவர். பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படுத்த முயற்சித்தவர். மிகுந்த பேச்சாற்றல் மிக்கவர். உலக நாடுகள் எல்லாம் மதித்த தலைவர். எதிரியே இல்லாத தலைவர்.
திருமாவளவன்: தீன தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், வாஜ்பாயின் மறைவால் மிகவும் வருந்துகிறேன். பன்முகத் தன்மை கொண்டவர். மாற்றுக் கருத்துள்ளவர்களையும் அரவணைத்துச் செல்லும் மனதுள்ளவர். தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் போன்ற விளிம்பு நிலை சமூகத்தினரும் மதிப்பளிக்கும் வகையில் அவரது செயல்கள் இருந்தன.
கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள வாஜ்பாயின் இல்லத்தில் அவரது உடலுக்கு தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வைகோ, கிருஷ்ணசாமி, தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: வாஜ்பாய் என் மீது தந்தையைப் போல அன்பு வைத்திருந்தார். கடந்த 8 ஆண்டுகளில் ஆண்டுக்கு மூன்று தடவையாவது அவரை தில்லியில் சந்தித்துவிட்டுச் செல்வேன். கன்னியாகுமரியில் காமராஜர் மண்டபம் அமைக்க அனுமதி வழங்கியவர் அவர்தான். என்னுடைய வேண்டுகோளை ஏற்று நெய்வேலி அனல் மின் நிலையத்தை தனியார்மயப்படுத்தும் முடிவை கைவிட்டார். கூட்டணி ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். அவர், கூட்டணியில் அங்கம் வகித்த சிறிய கட்சிகளின் ஆலோசனைகளையும் கேட்டுவிட்டு முடிவு எடுத்தார். கார்கில் யுத்தத்தில் இந்தியாவின் புகழைப் பாதுகாத்ததுடன் நாட்டையும் பாதுகாத்தார். தனது ஆட்சிக் காலத்தில் மதச்சார்பற்ற தன்மையை பேணிப் பாதுகாத்த மாபெரும் தலைவராகத் திகழ்ந்தார். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய 'டெசோ' மாநாட்டில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்காக அவர் ஆற்றிய உரை வரலாற்றில் முக்கியத்துவம் யம் பெற்றதாகும்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: இந்தியாவை வல்லரசாக்க பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய். அவர் வளர்ச்சித் திட்டங்களின் நாயகனாகத் திகழ்ந்தார். பன்முகத் தன்மை கொண்ட வாஜ்பாய், போன்ற தலைவரை இனிமேல் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை.
வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சார்யா,  பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு மு.க.அழகிரி அனுப்பியுள்ள கடிதம்:
தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் பால் மிகுந்த விருப்பம் உடையவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டார்.  அவரது மறைவால், சிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது. இருப்பினும் அவரது சிறந்த பணிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும்.  அவரது மறைவால் வாடும் உறவினர்கள் மற்றும் பாஜகவினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com