விசாரணை ஆணைய பதவியிலிருந்து நீதிபதி ரகுபதி ராஜிநாமா: தலைமைச் செயலாளருக்கு கடிதம்

புதிய தலைமைச் செயலக முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் பதவியை நீதிபதி ரகுபதி ராஜிநாமா செய்துள்ளார்.
விசாரணை ஆணைய பதவியிலிருந்து நீதிபதி ரகுபதி ராஜிநாமா: தலைமைச் செயலாளருக்கு கடிதம்


புதிய தலைமைச் செயலக முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் பதவியை நீதிபதி ரகுபதி ராஜிநாமா செய்துள்ளார்.
தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தனது ராஜிநாமா கடிதத்தை நீதிபதி ரகுபதி அண்மையில் அனுப்பியுள்ளார்.
ரகுபதி ஆணையம்: திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றத்தை அடுத்து அதிமுக அரசு இந்தக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியது. இந்தக் கட்டடம் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து அதிமுக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டு நீதிபதி ரகுபதி விசாரணை ஆணையத்துக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
மீண்டும் விசாரணை: ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்த ஆணையத்துக்கு வழங்கப்படும் நிதி மற்றும் இதர செலவினங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மேலும், இந்த ஆணையம் மேற்கொண்ட விசாரணை தொடர்பான ஆவணங்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அண்மையில் உத்தரவிட்டார்.
ராஜிநாமா கடிதம்: இந்த நிலையில், ஆணையத்தின் பொறுப்புகளிலிருந்து ராஜிநாமா செய்து கொள்வதாக தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிபதி ரகுபதி கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடித விவரம்:-
கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடைபெறாமல் இருந்ததற்கு விசாரணை ஆணையம் காரணம் அல்ல. இந்த ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையும், அதை நீக்கக் கோரி தங்கள் தரப்பில் பல தடவை முறையிட்டும் அந்த வழக்கை விசாரணை செய்யாததே காரணம் ஆகும். 
இந்த விவகாரத்தில் என்னால் முடிந்தவரை ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டேன். மேலும் நீதிபதியின் உத்தரவில், ஓய்வுபெற்ற பின் ஏதாவது பதவிகளைத் தேடி ஓடுவதைப் போல் குறிப்பிட்டுள்ளது, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளிடையே பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மௌலிவாக்கம் கட்டட விபத்துக்கு: இந்த ஆணையம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, ஆணையத்தை மறைமுகமாக ரத்து செய்வது போல் உள்ளது. மெளலிவாக்கம் கட்டட விபத்தில் 65 பேர் பலியான சம்பவம் தொடர்பாக எந்தவிதமான ஊதியமும் பெறாமல் 45 நாள்களில் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தேன்.
இந்த ஆணையத்தில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை எனவே, இந்த ஆணையத்தில் இருந்து ராஜிநாமா செய்கிறேன்; எனக்கு வழங்கப்பட்ட கார் மற்றும் கணினி உள்ளிட்டவற்றை ஒப்படைக்கிறேன்' என அந்தக் கடிதத்தில் நீதிபதி ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com